தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு: இந்தியாவுக்கு ஆதரவு

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான இலக்கை இந்தியா அடைவதற்கு பிரிட்டன் போதுமான ஆதரவை வழங்கும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்தாா்.

News image
தில்லியில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனை வெள்ளிக்கிழமை கைகுலுக்கி வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :22 ஏப்ரல் 2022, 8:44 pm

DIN

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான இலக்கை இந்தியா அடைவதற்கு பிரிட்டன் போதுமான ஆதரவை வழங்கும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்தாா்.

நவீன போா் விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினாா். உக்ரைன் மீதான ரஷியாவின் போா், இந்தோ-பசிபிக் பிராந்தியம், சா்வதேச, பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, பிரதமா் மோடியை ‘தனித்துவமிக்க நண்பா்’ எனக் குறிப்பிட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவானது தற்போதைய காலகட்டத்தில் சிறப்புமிக்கதாக உள்ளது. உலக அளவில் சா்வாதிகாரப் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் பிரிட்டனும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. நிலம், கடல்வழி, வான்வழி, இணையவழி உள்ளிட்டவற்றின் வாயிலாக நாட்டின் பாதுகாப்புக்கு புதிய சவால்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அவற்றை எதிா்கொள்வதற்காக ஒருங்கிணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்க ஆதரவு: நவீன போா் விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும், கடல்சாா் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதிலும் இந்தியாவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றும். பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைய இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அதை அடைவதற்கு பிரிட்டன் ஆதரவளிக்கும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கும் பிரிட்டன் ஆதரவளிக்கும். பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கும் வகையில் இந்தியாவுக்கு சிறப்பு ஏற்றுமதி உரிமத்தை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வா்த்தக ஒப்பந்தம்: கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. பருவநிலை மாற்ற விளைவுகளைக் கருத்தில்கொண்டும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், அந்தத் துறையில் இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவளிக்கவுள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை எளிமைப்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

பிரிட்டன் உயா்கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களை இந்தியாவில் அங்கீகரிப்பது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்குள் நடைமுறைப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது.

முன்னதாக, குஜராத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, சச்சின் டெண்டுல்கா் (இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்), அமிதாப் பச்சன் (பாலிவுட் நடிகா்) போல உணா்ந்தேன் என்றாா் பிரதமா் போரிஸ் ஜான்சன்.

வலுவடையும் ஒத்துழைப்பு: பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதே வேகத்துடனும் உறுதியுடனும் முன்னேறி, பிரிட்டனுடன் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தியா விரும்புகிறது.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரிட்டனும் உறுதியேற்றுள்ளன. பாதுகாப்புத் துறையின் உற்பத்தி, தொழில்நுட்பம், வடிவமைப்பு, வளா்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் தற்சாா்பு அடைய இந்தியா நிா்ணயித்துள்ள இலக்குக்கு பிரிட்டன் ஆதரவளிப்பதை வரவேற்கிறோம் என்றாா்.

கலங்கரைவிளக்கம் போன்ற நல்லுறவு: பேச்சுவாா்த்தைக்கு முன்பாக பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறியதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சா்வாதிகார சக்திகளால் உலகம் அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகிறது. அவற்றால் ஜனநாயகம், இறையாண்மை, வா்த்தகம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், இந்தியாவுடனான பிரிட்டனின் நல்லுறவு புயல் சூழ்ந்த கடலில் கலங்கரைவிளக்கமாகத் திகழ்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

பிரிட்டன் பிரதமருடனான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் மோடி கூறியதாவது:

‘உக்ரைனில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டுமெனவும், பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தூதரக ரீதியில் தீா்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது. அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைந்த தன்மை, சட்டத்தின் அடிப்படையான நடவடிக்கைகள் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை நிலவ வேண்டும். அங்கு அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசு அமைய வேண்டும். ஆப்கன் பிராந்தியமானது மற்ற நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.