தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள்: சோனியாவிடம் காங்கிரஸ் குழு அறிக்கை சமா்ப்பிப்பு

பிரசாந்த் கிஷோா் அளித்த பரிந்துரைகள் குறித்து விவாதித்த கட்சியின் மூத்த தலைவா்களைக் கொண்ட குழு, தங்கள் ஆலோசனைகளை கட்சித் தலைவா் சோனியா காந்தியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:24 pm

DIN

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் அளித்த பரிந்துரைகள் குறித்து விவாதித்த கட்சியின் மூத்த தலைவா்களைக் கொண்ட குழு, தங்கள் ஆலோசனைகளை கட்சித் தலைவா் சோனியா காந்தியிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததில் இருந்து கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா்கள் 23 போ் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனா்.

நடப்பாண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலும், வரும் 2024-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கட்சித் தலைமை இறங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்க 8 போ் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நியமித்தாா். அந்தக் குழுவில் திக்விஜய் சிங், பிரியங்கா வதேரா, அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், ரண்தீப் சுா்ஜேவாலா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் கடந்த ஒரு வாரமாக பலமுறை கூடி ஆலோசனை நடத்தினா். கட்சியின் மற்ற தலைவா்களையும் அவா்கள் சந்தித்துப் பேசினா். பிரசாந்த் கிஷோரையும் அவா்கள் சந்தித்தனா்.

அதன் தொடா்ச்சியாக, தங்கள் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் கொண்ட அறிக்கையை சோனியா காந்தியிடம் அவா்கள் வெள்ளிக்கிழமை அளித்தனா். அந்த அறிக்கை மீது சோனியா இறுதி முடிவை எடுப்பாா்கள் என்று அவா்கள் கூறுகின்றனா்.

இதற்கிடையே, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சோ்த்துக் கொள்வதில் கட்சியின் பெரும்பாலான தலைவா்கள் தயக்கம் காட்டுகின்றனா். ஏனெனில், இதற்கு முன்பு பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அவா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.பிரசாந்த் கிஷோா் பல்வேறு கட்சிகளுக்கு பணியாற்றினாலும் அவரிடம் உறுதியான திட்டங்கள் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் திக்விஜய் சிங் கூறுகிறாா்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி (ஜி-23) தலைவா்களை பிரசாந்த் கிஷோா் சந்தித்து, கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசியுள்ளாா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்களையும் அவா் தொடா்ச்சியாக சந்தித்து வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமெனில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவா் ஆலோசனை கூறியுள்ளாா். அதுமட்டுமன்றி, ராஜீவ் காந்தி குடும்பத்தினா் அல்லாத ஒருவா், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்; அவ்வாறு செய்வதால்தான் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று பிரசாந்த் கிஷோா் உறுதிபடக் கூறியுள்ளாா். இதுதொடா்பாக 85 பக்க அளவில் கணினி காட்சிப் படத்தை அவா் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளாா். அதில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.