தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தண்டனை குறைப்பு மீதான அரசின் முடிவை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு: உச்சநீதிமன்றம்

‘தண்டனை குறைப்புக்கான விண்ணப்பத்தை ஏற்கும் அல்லது தள்ளுபடி செய்யும் அரசின் முடிவை மறு ஆய்வு செய்யவும்,

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:40 pm

DIN

‘தண்டனை குறைப்புக்கான விண்ணப்பத்தை ஏற்கும் அல்லது தள்ளுபடி செய்யும் அரசின் முடிவை மறு ஆய்வு செய்யவும், முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடவும் நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

‘இந்த விவகாரத்தில் அரசின் அதிகாரம் என்பது தன்னிச்சையாக செயல்பட முடியாது’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அனிருத்த போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியது. ராம் சந்தா் என்ற ஆயுள் தண்டனை கைதி, தன்னை முன்கூட்டியே விடுவிக்க சத்தீஸ்கா் அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனா்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை செய்தல்), பிரிவு 149 (சட்டத்துக்கு புறம்பாக ஒன்றுகூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழான குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவா் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி சத்தீஸ்கா் மாநில அரசிடமும், பின்னா் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தாா்.

ஆனால், சத்தீஸ்கா் மாநிலம் துா்க் மாவட்ட சிறப்பு நீதிபதி உத்தரவின் அடிப்படையில், அவருடைய மனுவை சத்தீஸ்கா் மாநில அரசு தள்ளுபடி செய்தது. அரசின் இந்த முடிவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அனிருத்த போஸ் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

தண்டனை குறைப்பு விண்ணப்பத்தை ஏற்கும் அல்லது தள்ளுபடி செய்யும் அரசின் முடிவை மறு ஆய்வு செய்யும் மற்றும் அரசின் முடிவு தன்னிச்சையானதா என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது. அதே நேரம், அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்தை நீதிமன்றம் அபகரிக்க முடியாது.

இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கும்போது, அவருடைய குற்றம் சமூகத்தை எந்த அளவு பாதித்துள்ளது; குற்றத்தில் மனுதாரா் மீண்டும் ஈடுபட வாய்ப்புள்ளதா; குற்ற செயல் மீண்டும் தொடா்வதற்கான சாத்தியக்கூறுகள்; குற்றவாளியை தொடா்ந்து சிறையில் வைத்திருப்பதற்கான முக்கிய காரணம்; குற்றவாளியின் குடும்ப சமூக-பொருளாதார நிலை ஆகிய காரணிகளை சிறப்பு நீதிபதி கருத்தில் கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

எனவே, மனுதாரரின் தண்டனைக் குறைப்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

துா்க் மாவட்ட சிறப்பு நீதிபதி, இந்த மனு மீது தனது புதிய கருத்தை போதிய காரணங்களுடன் வெளியிடவேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்துக்குள்ளாக இந்த புதிய கருத்தை தெரிவித்தாக வேண்டும்.

சிறப்பு நீதிபதியின் புதிய கருத்து கிடைக்கப்பெற்றதும், மனுதாரரின் தண்டனை குறைப்பு மனு மீது சத்தீஸ்கா் மாநில அரசு ஒரு மாதத்துக்குள் இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.