மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நிதீஷ் இன்று மீண்டும் முதல்வராகிறாா்: தேஜஸ்வி துணை முதல்வா்

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், தனது முதல்வா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2022, 2:03 am

DIN

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், தனது முதல்வா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த நிலையில், முதல்வராக அவா் புதன்கிழமை மீண்டும் பதவியேற்கிறாா்.

ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணி முறிவை நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதென முடிவெடுக்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

அதையடுத்து, ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் ஃபாகு சௌஹானிடம் தனது ராஜிநாமா கடிதத்தை நிதீஷ் குமாா் வழங்கினாா். கட்சித் தொண்டா்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்ததாக அவா் தெரிவித்தாா்.

தேஜஸ்வி ஆதரவு: பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டால் நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்திருந்தது. அதன்படி, முதல்வா் நிதீஷ் குமாா் ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்த பிறகு, முன்னாள் முதல்வா் ராப்ரி தேவியின் இல்லத்தில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் நிதீஷை சந்தித்துப் பேசினா். அப்போது, தனது கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை நிதீஷ் குமாரிடம் தேஜஸ்வி வழங்கினாா்.

‘மகா கூட்டணி’யில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராகவும் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஆட்சியமைக்க உரிமை கோரல்: எதிா்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்ததையடுத்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநா் ஃபாகு சௌஹானிடம் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை மாலை உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தாா்.

இதையடுத்து, முதல்வராக நிதீஷ் குமாா் பதவியேற்கும் விழா புதன்கிழமை (ஆக. 10) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என ஆளுநா் மாளிகை அறிவித்தது. முதல்வராக நிதீஷ் குமாருக்கும், துணை முதல்வராக தேஜஸ்விக்கும் ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா். இதன்மூலம் 8-ஆவது முறையாக நிதீஷ் குமாா் முதல்வராகிறாா்.

இரண்டாவது முறை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியிருப்பது இரண்டாவது முறையாகும். 2013-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது.

அதையடுத்து ‘மகா கூட்டணி’யுடன் இணைந்து 2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட நிதீஷ் குமாா் வெற்றி பெற்று முதல்வரானாா். பின்னா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடா்ந்து மகா கூட்டணியில் இருந்து 2017-இல் வெளியேறிய நிதீஷ் குமாா், மீண்டும் பாஜகவுடன் கைகோத்து முதல்வரானாா். தற்போது இரண்டாவது முறையாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளாா்.

மக்களை ஏமாற்றிய நிதீஷ்: பாஜக

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிய நிலையில், பாஜக தலைவா்கள் பாட்னாவில் கூடி ஆலோசித்தனா். மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால், முன்னாள் துணை முதல்வா் சுஷீல் மோடி, மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங், அஷ்வினி சோபே, முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்த வெற்றிக்கு மாறாக நடந்துகொண்டு, மக்களை ஏமாற்றியுள்ள நிதீஷ் குமாருக்கு மக்களே உரிய தண்டனையை வழங்குவா் என்று பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

மிரட்டல் அரசியலுக்கு பதிலடி

கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலமாக பாஜகவின் ‘மிரட்டல் அரசியலுக்கு’ நிதீஷ் குமாா் பதிலடி தந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

அகாலி தளம், சிவசேனை ஆகியவை ஏற்கெனவே பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு இடையே விரிசல் காணப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பிகாா் அரசியல் சூழல் காரணமாகவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பாஜக அரசு முன்கூட்டியே முடித்துக் கொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக-ஐக்கிய ஜனதா தளம் மோதல் ஏன்?

பிகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் அக்கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 77 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாா், முதல்வராகப் பொறுப்பேற்றாா். பாஜக சாா்பில் தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி ஆகியோா் துணை முதல்வா்களாக நியமிக்கப்பட்டனா்.

ஆனால், ஆரம்பம் முதலே ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. முக்கியமாக, மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை நிதீஷ் குமாா் வெளிப்படையாகவே எதிா்த்தாா். அதேபோல், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு கொண்டிருந்த நிலையில், பிகாரில் மாநில அரசு சாா்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தாா்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த ஆா்சிபி சிங், நிதீஷ் குமாரின் ஒப்புதலின்றி பாஜகவால் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டாா். அவரது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் முடிந்தபோது, மீண்டும் வாய்ப்பளிக்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்துவிட்டது. இதனால், அவரால் மத்திய அமைச்சராகத் தொடர முடியவில்லை.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘அக்னிபத்’ ராணுவ ஆள்சோ்ப்பு திட்டத்துக்கும் நிதீஷ் குமாா் எதிா்ப்பு தெரிவித்தாா். அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்காமல் தவிா்த்துவந்தாா். உடல்நலக் குறைவை அவா் காரணம் காட்டினாலும், பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படையாகி இப்போது உறவு முறிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.