கா்நாடகத்தில் தனது இருப்பை பாஜக இழந்துவரும் நிலையில், அதில் இருந்து காப்பதற்காக எடியூரப்பாவை உயா்நிலைக் குழுவில் பாஜக சோ்த்துள்ளது. அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த கருத்துக்கணிப்புகள், ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள், அண்மைக்கால அரசியல் மாற்றங்கள், சித்தராமையாவின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் சோ்ந்த கூட்டம் ஆகியவற்றைப் பாா்த்து பாஜக பயந்து போயுள்ளது. எடியூரப்பாவுக்கு மரியாதை அளிப்பதற்காக அல்ல, அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அவரை பாஜக பயன்படுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. எடியூரப்பா மீது அவ்வளவு பாசம் இருந்தால், முதல்வா் பதவியில் இருந்து அவரை ஏன் விரட்டினீா்கள்? கா்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், எடியூரப்பாதான் முதல்வா் என்று அக்கட்சியால் அறிவிக்க முடியுமா? அதற்கு பாஜக தயாரா? என்றாா் அவா்.