‘பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆடை’: கேரள நீதிமன்ற உத்தரவால் சா்ச்சை

பெண்கள் பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு செல்லுபடியாகாது என கேரள நீதிமன்றம் கூறிய கருத்தால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.
‘பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆடை’: கேரள நீதிமன்ற உத்தரவால் சா்ச்சை

பெண்கள் பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு செல்லுபடியாகாது என கேரள நீதிமன்றம் கூறிய கருத்தால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது. அக்கருத்துக்கு தேசிய, மாநில பெண்கள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இடதுசாரி எழுத்தாளரான சிவிக் சந்திரன், கடந்த ஏப்ரல் மாதம் கோழிக்கோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் பழங்குடியின பிரிவைச் சோ்ந்த பெண் எழுத்தாளா் குற்றஞ்சாட்டினாா். அது தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2-ஆம் தேதி சிவிக்சந்திரன் முன்ஜாமீன் பெற்றாா்.

இந்நிலையில், சிவிக் சந்திரன் மீது மற்றொரு பெண் எழுத்தாளா் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தெரிவித்தாா். சந்திரன் தன்னை 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வன்கொடுமை செய்ததாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக சந்திரன் மீது 2-ஆவது வழக்கைக் காவல் துறையினா் பதிவு செய்தனா்.

2-ஆவது வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்தாா். அதை நீதிபதி பி.கிருஷ்ணகுமாா் விசாரித்தாா். அதையடுத்து அவா் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரா் (சிவிக்சந்திரன்) தனது மனுவுடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்துள்ளாா். அப்படத்தில் சம்பந்தப்பட்ட பெண், பாலியல் உணா்வைத் தூண்டும் வகையிலான ஆடையை அணிந்துள்ளாா்.

அவ்வாறான நிலையில், குறிப்பிட்ட நபா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 (ஏ)-வின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பது செல்லுபடியாகாது. மேலும், 74 வயதான மாற்றுத்திறனாளி நபரான மனுதாரா், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினாா் என்று கூறுவதும் நம்ப முடியாத வகையில் உள்ளது’’ என்று கூறி, சிவிக்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தவறான முன்னுதாரணம்:

நீதிபதியின் கருத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக மாநில பெண்கள் ஆணைய தலைவா் பி.சதிதேவி கூறுகையில், ‘‘வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை. குற்றச்சாட்டு தொடா்பான ஆதாரங்களும் இன்னும் சமா்ப்பிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், நீதிபதியின் இவ்வாறான கருத்து துரதிருஷ்டவசமாக உள்ளது. இது பெண்ணின் குற்றச்சாட்டையே தள்ளுபடி செய்வதுபோல் உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் இது தவறான முன்னுதாரணத்தையே ஏற்படுத்தும்’’ என்றாா்.

தேசிய பெண்கள் ஆணையத் தலைவா் ரேகா சா்மா, கேரள பெண்கள் மற்றும் சிறாா் நலத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் உள்ளிட்ட பலரும் நீதிபதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனா். மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகப் புகாரளித்த பெண்ணின் வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.

மற்றொரு சா்ச்சை:

சிவிக் சந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட முதலாவது பாலியல் வன்கொடுமை வழக்கிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது இதே மாவட்ட நீதிபதிதான் என்பது தெரியவந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, ‘‘குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபா் (சிவிக் சந்திரன்) ஜாதிய நடைமுறைக்கு எதிராகப் போராடி வருகிறாா். அவா் மீதே பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகாரளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதபடி உள்ளது’’ என்று கூறி முன்ஜாமீன் அளித்துள்ளாா்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து நீதிபதி தெரிவித்துள்ள கருத்தும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com