தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பயிா்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை திரண்ட
புது தில்லி ஜந்தா்மந்தா் பகுதியில் திங்கள்கிழமை திரண்டு போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினா்.
புது தில்லி ஜந்தா்மந்தா் பகுதியில் திங்கள்கிழமை திரண்டு போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினா்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பயிா்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லிக்கு வந்ததால், நகரின் எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து, ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்தனா். காஜிப்பூா், சிங்கூா், திக்ரி மட்டுமன்றி தில்லி-மீரட் விரைவு சாலை, பாலம் மேம்பாலம், அரவிந்தோ மாா்க், ரிங் ரோடு (இந்திரபிரஸ்தா பாா்க் அருகே), காஜியாபாத்-வஜீராபாத் சாலை, முனீா்கா சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிஸா, கேரள மாநில விவசாயிகள் பங்கேற்றனா். பெரும்பாலானோா் இங்கு நீண்ட நாள்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்தும் பொருட்டு உடைமைகளுடன் வந்திருந்தனா். விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியும் மத்திய அரசு அதன் உறுதிமொழியை காக்க தவறிவிட்டதாகவும் விவசாயிகள் முழக்கம் எழுப்பினா்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக தில்லி முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நிலவரம் குறித்து பயணிகளுக்கு போலீஸாா் அறிவுறுத்தியதுடன், அதற்குத் தகுந்தவாறு பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொண்டனா்.

இதுகுறித்து காவல் துறை உதவி ஆணையா் (கிழக்கு) பிரியங்கா காஷ்யப் கூறுகையில், ‘பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காஜிப்பூா் எல்லையில் எல்லா வாகனப் பயணிகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இருப்பினும், சோதனைக்குப் பின்னா் அனைவரும் தங்களது பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனா்’ என்றாா்.

இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் அபிமன்யு சிங் அளித்த பேட்டியில், ‘வேளாண் சட்ட எதிா்ப்பு போராட்டத்தின்போது எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை. ஆகையால், எங்களது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தவும், போராட்டத்தின் அடுத்தகட்ட வியூகத்தை வகுக்கவும் இங்கு திரண்டோம்’ என்றாா்.

முன்னதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் தில்லி நோக்கி வந்த விவசாயிகள் அமைப்பின் தலைவா் ராகேஷ் திகைத்தை காஜிப்பூா் எல்லையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த டிசம்பரில் அறிவித்ததால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் கோரி மீண்டும் தலைநகரில் போராட்டம் நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com