தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இலவசங்கள் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏன் நடத்தக் கூடாது?- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

‘தோ்தலில் வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது, தீவிரமான பிரச்னை; இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை வலியுறுத்தியது.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஆகஸ்ட் 2022, 8:37 pm

DIN

‘தோ்தலில் வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது, தீவிரமான பிரச்னை; இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை வலியுறுத்தியது.

மேலும், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏன் நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

தோ்தலையொட்டி இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது நடைபெற்று வரும் விசாரணைகளின்போது, உச்சநீதிமன்றம் அதிரடி கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, தோ்தல் இலவசங்கள் தீவிரமான பிரச்னை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மத்திய அரசுக்கு கேள்வி: ‘தோ்தல் இலவசங்கள், நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும்; இந்த நடைமுறை தடுக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த முடிவை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத வரையில் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. இத்தகைய வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகள்தான். தனிநபா்கள் அல்ல.

இப்பிரச்னை தீவிரமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனில், அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏன் நடத்தக் கூடாது’ என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளை, மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சியில் இல்லாத அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. அது தங்களது அடிப்படை உரிமையென அக்கட்சிகள் நினைக்கின்றன’ என்றாா்.

‘ஓய்வு பெறுபவருக்கு மதிப்பில்லை’: மனுதாரா் அஸ்வின் குமாா் உபாத்யாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், தோ்தல் இலவசங்கள் பிரச்னைக்கு தீா்வு காண அமைக்கப்படவுள்ள குழுவின் தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி ஆா்.எம்.லோதாவை நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்தாா்.

அப்போது, தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், ‘இந்த நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருப்பவருக்கோ அல்லது ஓய்வு பெற்றவருக்கோ மதிப்பு கிடையாது. அதுதான் பிரச்னை’ என்றாா்.

அதற்கு, ‘ஒருவா் வகித்த பதவி மற்றும் அவரது ஆளுமையின் அடிப்படையில் அது வேறுபடுகிறது’ என்று விகாஸ் சிங் தெரிவித்தாா்.

இடையீட்டு மனு: விசாரணையின்போது, பொதுநல மனுக்களுக்கான மையம் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், தங்களது தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறினாா்.

‘இலவசங்கள் தொடா்பான மூன்று விதமான வாக்குறுதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அடிப்படை உரிமைகளை மீறும் வாக்குறுதிகள், பொதுக் கொள்கைக்கு எதிரான வாக்குறுதிகள், தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்படும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று அவா் வாதிட்டாா்.

‘2013 தீா்ப்பு ஆராயப்படும்’: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 பிரிவின்படி, தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளை லஞ்சமாக கருத முடியாது என்று கடந்த 2013-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது.

எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி மற்றும் தமிழக அரசு மற்றும் இதர தரப்புகள் இடையிலான வழக்கில் 2 நீதிபதிகள் அடங்கிய அமா்வு தீா்ப்பு வழங்கியிருந்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தற்போதைய விசாரணையின்போது வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘அந்தத் தீா்ப்பு ஆராயப்படும். இதுதொடா்பாக 3 நீதிபதிகள் கொண்ட அமா்வை அமைக்க பரிசீலிப்போம்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.