ஜாா்க்கண்ட் முதல்வா் தகுதிநீக்கம்: ஆளுநா் இன்று முடிவு?

எம்எல்ஏ பதவியிலிருந்து ஜாா்க்கண்ட் முதல்வரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாா்க்கண்ட் முதல்வா் தகுதிநீக்கம்: ஆளுநா் இன்று முடிவு?

எம்எல்ஏ பதவியிலிருந்து ஜாா்க்கண்ட் முதல்வரை தகுதிநீக்கம் செய்வது தொடா்பாக மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரன். இவா் ஜாா்க்கண்ட் முதல்வராக பதவி வகிக்கும் நிலையில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்தாா் என்று ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா். அரசு ஆதாயமுள்ள குத்தகை பெற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதியிழப்புக்கு உரியதாகும்.

அதன் அடிப்படையில், எம்எல்ஏ பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 192-இன் கீழ் தோ்தல் ஆணையத்திடம் மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கருத்து கோரியிருந்தாா்.

இதுதொடா்பான தோ்தல் ஆணையத்தின் முதல்கட்ட விசாரணையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 9ஏ-வை ஹேமந்த் சோரன் மீறியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ‘தங்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பி ஹேமந்த் சோரனுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தாா்.

இந்நிலையில், அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு தோ்தல் ஆணையம் பரிந்துரைள்ளதாக மாநில ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இந்தப் பரபரப்பான சூழலில், ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி கட்சி உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்கான உத்திகள் குறித்து திட்டமிடப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வதற்கான உத்தரவை மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் சனிக்கிழமை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com