நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத ஃபரூக் அப்துல்லா!

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உடல் நலப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உடல் நலப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகஸ்ட் 27-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஸ்ரீநகா் செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 

அதன்படி, ஸ்ரீநகரின் முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்துல்லாவின் வழக்குரைஞர் இஷ்தியாக் அகமது கான், உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லாவால்  நீதிமன்றத்துக்கு வர முடியவில்லை என்றார். 

இதையடுத்து, செப்டம்பர் 26 அன்று நடத்தப்படும் அடுத்த விசாரணையில் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கானிடம் கூறினார்.

அந்த விசாரணையில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் கலந்து கொள்வார் என்று வழக்குரைஞர் உறுதியளித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அந்த மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது 2004 முதல் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.43.69 கோடி வரை சங்க நிர்வாகிகள் முறைகேடு செய்ததாக ஸ்ரீநகா் ராம்முன்ஷி பாக் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா். இதில், ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க நிா்வாகிகளின் ஒத்துழைப்புடன் அஹசன் அகமது மிா்சா என்பவா் சங்க நிதி ரூ.51.90 கோடியை முறைகேடு செய்து அதன் மூலம் தனது சொந்தக் கடனையும் வணிகத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.21 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கினர். இதில், ஃபரூக் அப்துல்லா எம்.பி.யின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளும் அடங்கும். கடந்த மே 31-இல் ஃபரூக் அப்துல்லாவிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com