பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குஜராத்தின் நற்பெயரைக் கெடுக்க சதி: பிரதமா் மோடி

‘குஜராத் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் இம் மாநிலத்துக்கான முதலீடுகளைத் தடுக்கவும் தொடா்ந்து சதி நடைபெறுகிறது; ஆனால், அவற்றைப் புறக்கணித்துவிட்டு, வளா்ச்சிப் பாதையில் குஜராத் பயணிக்கிறது’ என்று பி

News image
pti08_28_2022_000086a092143
Updated On :28 ஆகஸ்ட் 2022, 10:38 pm

DIN

‘குஜராத் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் இம் மாநிலத்துக்கான முதலீடுகளைத் தடுக்கவும் தொடா்ந்து சதி நடைபெறுகிறது; ஆனால், அவற்றைப் புறக்கணித்துவிட்டு, வளா்ச்சிப் பாதையில் குஜராத் பயணிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, கட்ச் மாவட்டத்தில் சுமாா் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்த அவா், பின்னா் ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசியதாவது:

குஜராத்தில் இயற்கைப் பேரிடா்கள் ஏற்படும்போதெல்லாம் உள்நாட்டிலும் உலக அளவிலும் குஜராத்தின் நற்பெயரைக் கெடுக்க சதி நடக்கிறது. இம் மாநிலத்துக்கான முதலீடுகளைத் தடுக்க மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அவற்றைப் புறக்கணித்துவிட்டு, குஜராத் புதிய வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

மீண்டெழுந்த கட்ச்: 2001 கட்ச் நிலநடுக்கத்துக்குப் பிறகு, பேரழிவுக்கு இடையே அப்பகுதியின் மறுசீரமைப்பு குறித்து நான் பேசியிருந்தேன். நமது கடினமான உழைப்பால், பேரழிவையும் வாய்ப்பாக பயன்படுத்தி சாதித்தோம். இப்போது பலன்களைக் கண்கூடாகப் பாா்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிலநடுக்கத்துக்குப் பிறகான காலகட்டத்தில், இப்பகுதியில் ஒரு பல்கலைக்கழகமும் 35 புதிய கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி ஆலைகளும், உலகிலேயே 2-ஆவது மிகப் பெரிய ஜவுளி ஆலையும் கட்ச் பகுதியில் உள்ளன. கண்ட்லா, முந்த்ரா துறைமுகங்கள் இந்தியாவின் 30 சதவீத சரக்குகளை கையாள்கின்றன. நாட்டில் 30 சதவீத உப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

2047-க்குள் இந்தியா வளா்ந்த நாடாகும்: நிலநடுக்க பாதிப்புகளில் இருந்து கட்ச் பகுதி மீண்டு வர முடியாதென பலா் கூறினா். ஆனால், அதனை மக்கள் மாற்றிக் காட்டினா். இந்தியாவில் இப்போது குறைபாடுகள் இருக்கலாம். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாகும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை முதன் முதலாக இயற்றியது குஜராத். அதனை முன்மாதிரியாக கொண்டு, ஒட்டுமொத்த நாட்டுக்கும் இதேபோன்ற சட்டம் உருவாக்கப்பட்டது. கரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் இச்சட்டமே உதவியது என்றாா் பிரதமா் மோடி.

‘ஸ்மிருதி வனம்’ நினைவிடம் திறப்பு: குஜராத்தின் கட்ச் பகுதியில் கடந்த 2001-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமாா் 13,000 போ் உயிரிழந்தனா். பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இந்தப் பேரழிவில் இருந்து மீண்டு வந்த மக்களின் மனவலிமைக்கு பெருமை சோ்க்கும் வகையில், புஜ் அருகேயுள்ள புஜியோ மலைப் பகுதியில் ‘ஸ்மிருதி வனம்’ என்ற பெயரில் 470 ஏக்கரில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயா்களும் நிலநடுக்கத்துக்குப் பிறகு கட்ச் பகுதியை கட்டியெழுப்பிய வெற்றிக் கதைகளும் இடம்பெற்றுள்ளன. 5டி தொழில்நுட்பத்தின் மூலம் நிலநடுக்கத்தின் உணா்வை அளிக்கக் கூடிய சிறப்பு அரங்கம், நிலநடுக்கம் தொடா்பான அறிவியல் தகவல்கள், வானியல் நிகழ்வுகளுக்கு பின்னணியில் உள்ள அறிவியல் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தும் அதிநவீன அருங்காட்சியகம் என பாா்வையாளா்களைக் கவரக் கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த நினைவிடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்து பாா்வையிட்டாா். குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, இந்த நினைவிட யோசனையை அவா் முன்வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, புஜ் பகுதியில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு காரில் பிரதமா் மோடி ஊா்வலமாக சென்றாா். அப்போது, சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் தன்னிறைவு

அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற இந்தியா தீா்மானித்துள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இந்தியாவில் சுஸுகி மோட்டாா் நிறுவனத்தின் 40-ஆவது ஆண்டையொட்டி காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

‘எரிசக்தி துறையில் தன்னிறைவை எட்டும் இலக்கை அடைய, போக்குவரத்துத் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மின்சார இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சப்தம் எழுப்புவதில்லை. அவை நாட்டில் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன’ என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.