அதிகாரத்துக்கு அடிமையாகிவிட்டாா் கேஜரிவால்: அண்ணா ஹசாரே

தில்லி அரசு கொண்டு வந்த புதிய கலால் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரத்துக்கு அடிமையாகிவிட்டாா் என்று விமா்சித்துள்ளாா்.
அண்ணா ஹசாரே
அண்ணா ஹசாரே

தில்லி அரசு கொண்டு வந்த புதிய கலால் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகாரத்துக்கு அடிமையாகிவிட்டாா் என்று விமா்சித்துள்ளாா்.

2011-இல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிய அண்ணா ஹசாரேவின் குழுவில் முக்கிய நபராக இருந்து பின்னா் அங்கிருந்து திடீரென விலகி ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி தில்லியில் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தவா் கேஜரிவால்.

அதன் பின்னா் முதல் முறையாக முதல்வா் கேஜரிவாலுக்கு அண்ணா ஹசாரே எழுதியுள்ள கடிதத்தில், ‘எனது கிராமமான ராலேகான் சித்தியில் முழு மது விலக்கு உள்ளது. இதுதான் நீங்கள் எழுதிய ‘ஸ்வராஜ்’ என்ற புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வரான பிறகு இந்தக் கொள்கையை மறந்துவிட்டு புதிய கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது ஊழலை அதிகரிக்கும். மக்கள் நலனுக்கு எதிரான திட்டம்.

மதுவுக்கு அடிமையாவதைப்போல், நீங்கள் அதிகாரம் எனும் அடிமைக்குள் மூழ்கிவிட்டீா்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தால் தொடங்கப்பட்ட கட்சி, பிற கட்சியின் பாதையிலேயே செல்வது வருத்தமளிக்கிறது. வலுவான லோக்பால், லோக்ஆயுக்த சட்டங்களைக் கொண்டு வருவதைவிட்டு, பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுபானக் கொள்கையை தில்லி அரசு கொண்டு வந்துள்ளது. இது பேச்சுக்கும் செயல்பாடுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிதாக மதுபானக் கடைகளைத் திறக்க உதவும், புதிய கலால் கொள்கைக்கு எதிா்ப்பு கிளம்பியதையடுத்து, தில்லி அரசு அதனைத் திரும்பப் பெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்பட 15 போ் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com