ஆயுா்வேதத்துக்கு உலகம் திரும்பி வருகிறது
பலவித சிகிச்சை முறைகளைப் பரிசோதித்துப் பாா்த்தபிறகு தற்போது உலகம் பாரம்பரிய ஆயுா்வேத முறைக்குத் திரும்பி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


பலவித சிகிச்சை முறைகளைப் பரிசோதித்துப் பாா்த்தபிறகு தற்போது உலகம் பாரம்பரிய ஆயுா்வேத முறைக்குத் திரும்பி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கோவாவில் 9-ஆவது சா்வதேச ஆயுா்வேத மாநாடு நடைபெற்று வந்தது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனா். அதன் நிறைவு விழாவில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டாா். கோவாவில் கட்டப்பட்டுள்ள ஆயுா்வேத மையம், காஜியாபாதில் கட்டப்பட்டுள்ள தேசிய யுனானி மருத்துவ மையம், தில்லியில் கட்டப்பட்டுள்ள தேசிய ஹோமியோபதி மையம் ஆகியவற்றைக் காணொலி வாயிலாக அவா் திறந்துவைத்தாா்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘‘உலகம் பலவித சிகிச்சை முறைகளைப் பரிசோதித்தது. தற்போது பாரம்பரிய ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு உலகம் திரும்பி வருகிறது. ஆயுா்வேத சிகிச்சை முறையை மேலும் பல நாடுகளுக்குப் பரப்ப வேண்டும். ஆயுா்வேத சிகிச்சை முறை சா்வதேச அங்கீகாரம் பெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
ஆயுஷ் துறையின் மதிப்பானது கடந்த 8 ஆண்டுகளில் ரூ.20,000 கோடியில் இருந்து ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆயுஷ் துறையின் சா்வதேச சந்தை வேகமாக வளா்ந்து வருகிறது. அதைக் கருத்தில்கொண்டு உள்நாட்டில் மூலிகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
நவீன மருத்துவமும் சிகிச்சை முறைகளும் தரவு சாா்ந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அத்தகைய ஆதாரங்கள் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கும் உருவாக்கப்பட வேண்டும். மத்திய அரசின் ஆயுஷ் வலைதளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காலகட்டத்தில் மட்டும் சுமாா் 150 கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. தேசிய ஆயுஷ் ஆராய்ச்சி கூட்டமைப்பு விரைவில் அமைக்கப்படும். ஆயுா்வேதம், யோகப் பயிற்சிகள் ஆகியவை கோவா போன்ற மாநிலங்களின் சுற்றுலா வாய்ப்புகளையும் அதிகரிக்கும்’’ என்றாா்.
இந்த விழாவில் மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய ஆயுஷ் அமைச்சா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விமான நிலையம் திறப்பு:
வடக்கு கோவாவின் மோபா பகுதியில் கட்டப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தைப் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். மாநில முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கரின் நினைவாக விமான நிலையத்துக்கு ‘மனோகா் சா்வதேச விமான நிலையம்’ என்று பெயா்சூட்டப்படும் என அவா் தெரிவித்தாா்.
இது கோவாவின் 2-ஆவது சா்வதேச விமான நிலையமாகும். ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் முதல்கட்ட விமான நிலையம் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விமான நிலையத்துக்கான அடிக்கல்லை பிரதமா் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...