அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த ஜூன் மாதம் மருந்தக உரிமையாளா் உமேஷ் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி
அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த ஜூன் மாதம் மருந்தக உரிமையாளா் உமேஷ் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். அவருக்கு ஆதரவாக மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் மருந்தகம் நடத்தி வந்த உமேஷ் பிரஹலாத் கோலே (54) என்பவா் வாட்ஸ்-ஆப் குழுக்களில் பதிவுகளைப் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு மருந்தகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த உமேஷ் கொல்லப்பட்டாா். 

உமேஷின் கொலை வழக்கு தொடா்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அவா் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி,கொலையில் ஏதேனும் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதா? சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்பது குறித்து என்ஐஏ முழுமையாக விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணையை முடித்த தேசிய புலனாய்வு முகமை, வெள்ளியன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. உமேஷ், நூபுருக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிா்ந்ததால் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமேஷ் கொலை வழக்குத் தொடா்பாக 11 பேரை காவல் துறையினா் செய்த நிலையில், அவர்கள் முக்கிய குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் குற்றப்பின்னணி இருப்பதும், பயங்கரவாதக் குழுவைப் போல குற்றவாளிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து இந்தக் கொலையை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில், உமேஷ் பொதுவிடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் என்ஐஏ தெரிவிக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120பி, 341,302, 153ஏ, 201, 118, 505, 506, 34 மற்றும் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டம் - 1967ன் உள்பிரிவுகளான 16 , 17, 18, 19, 20 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றவாளிகளுக்கு தடை செய்யப்பட்ட எந்த பயங்கரவாதக் குழுவுடனும் தொடர்பில்லை என்றாலும், இவர்களே தனித்து ஒரு குழுவாக செயல்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரா் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். நூபுருக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதால், அவா் கொல்லப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னையா லால் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே உமேஷ் கொலை செய்யப்பட்டிருந்தார்.

உதய்பூரில் நடந்த தையல்காரர் படுகொலைச் சம்பவம் போன்றே, அமராவதி படுகொலையும் இருப்பதால், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. விசாரணையி, இரு கொலைகளுக்கும் நூபுருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்ததே காரணம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com