'ஷ்ரத்தா வழக்கு என்னைத் தூண்டியது': நடிகை துனிஷா வழக்கில் வாக்குமூலம்!

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கின் பின்னணி ஏற்படுத்திய பாதிப்பே தன்னை நடிகை துனிஷாவிடமிருந்து விலகியிருக்கத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சக நடிகர் ஷீசன் கான் காவல் துறையில் வாக்குமூலம்
தற்கொலை செய்துகொண்ட துனிஷா /  காதலரால் கொல்லப்பட்ட ஷ்ரத்தா வால்கர்
தற்கொலை செய்துகொண்ட துனிஷா / காதலரால் கொல்லப்பட்ட ஷ்ரத்தா வால்கர்

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கின் பின்னணி ஏற்படுத்திய பாதிப்பே தன்னை நடிகை துனிஷாவிடமிருந்து விலகியிருக்கத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சக நடிகர் ஷீசன் கான் காவல் துறையில் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் நடிகை துனிஷா சா்மா(21) தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சக நடிகரும் காதலருமான ஷீசன் கானை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் ஷீசன் கூறிய வாக்குமூலம் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த துனிஷா சர்மா, ஹிந்தி தொடர்களில் நடித்து வந்தார். 
‘பாரத் கா வீா் புத்ரா’, ‘மஹாராணா பிரதாப்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடா்களிலும் ‘ஃபிதூா்’, ‘பாா் பாா் தேக்கோ’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை துனிஷா சா்மா நடித்துள்ளாா். 

அந்தவகையில் ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்புக்கு மத்தியில் கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

துனிஷாவின் தாயார், தந்து மகளின் மறைவுக்கு காதலனும் சக நடிகருமான ஷீசன் காரணம் என காவல் துறையில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஷீசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், தில்லியில் இளம்பெண் ஒருவர் 33 துண்டுகளாக தனது காதலனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், அதனால், துனிஷாவுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினரின் முதல் நாள் விசாரணையில், மேலும் அவர் கூறியதாவது, ஷ்ரத்தா கொலை வழக்கு என்னை மிகவும் பாதித்தது. மதங்கள் அடிப்படையில் மாற்று மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்வதில் தயக்கம் தோன்றியது. இதனால் துனிஷா உடனான காதலை முறித்துக்கொண்டேன். மேலும் வயது வித்தியாசம் காரணமாகவும் இந்த முடிவை எடுத்தேன். (துனிஷா - 20 வயது, ஷீசன் -28 வயது)

துனிஷா இறப்பதற்கு சில நாள்கள் முன்புகூட தற்கொலைக்கு முயன்றாள். ஆனால் அப்போது நான் உடன் இருந்ததால், அவளைக் காப்பாற்றினேன். துனிஷாவின் தாயாரிடமும் இது தொடர்பாக கூறி கவனித்துக்கொள்ள வேண்டினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் ஷீசன் தனது மகளைப் பயன்படுத்திக்கொண்டதாகவும், தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். 20 வயதுடைய தனது மகளை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு அளித்ததாகவும், தற்போது வேறு சில பெண்களுடன் பழகுவதற்காக என் மகளுடனான காதலை முறித்துக்கொள்வதாக ஷீசன் கூறுவதாகவும் நடிகையின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com