
ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் தொடங்கிகேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியில் நடைபெற்று வருகின்றது.
நூறு நாள்களைக் கடந்துள்ள நடைப்பயணம் புத்தாண்டையொட்டி ஜனவரி 2 வரை ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் நடைப்பயணம் காஷ்மீர் நோக்கி பயணிக்கவுள்ளது.
இந்நிலையில் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், 'காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. தில்லியில் நடைபெற்ற பயணத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தில்லி காவல்துறை தவறிவிட்டது. ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஹரியாணாவில் இருந்து தவறான நபர்கள் சிலர் நடைப்பயணத்தில் நுழைந்ததாக ஹரியாணா உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சோஹ்னா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரு தலைவர்களும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 2013 நக்சல் தாக்குதலில் சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, வரவிருக்கும் நாள்களில் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.