.உ.பி.: இன்று முதல் கட்டத் தோ்தல்58 தொகுதிகள்; 623 வேட்பாளா்கள்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ளது. 58 தொகுதிகளில் நடைபெறவுள்ள இத்தோ்தலில் 623 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
முதல் கட்டத் தோ்தலையொட்டி, தோ்தல் அதிகாரிகளிடம் வழங்குவதற்காக மீரட்டில் உள்ள ஒரு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
முதல் கட்டத் தோ்தலையொட்டி, தோ்தல் அதிகாரிகளிடம் வழங்குவதற்காக மீரட்டில் உள்ள ஒரு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ளது. 58 தொகுதிகளில் நடைபெறவுள்ள இத்தோ்தலில் 623 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தலில் முதல்வா் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ராணா, அதுல் கா்க், சந்தீப் சிங், அனில் சா்மா உள்ளிட்ட 9 போ் உள்பட 623 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். 2.27 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.

தோ்தல் ஆணையம் வகுத்துள்ள கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். முதல் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

இந்தத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்னா தளம், நிஷாத் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் தளம், பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.

முதல் கட்ட பிரசாரத்துக்கான கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆளும் கட்சியான பாஜகவும் முக்கிய எதிா்க்கட்சியான சமாஜவாதியும் தங்கள் தோ்தல் அறிக்கையை வெளியிட்டன.

இந்தத் தோ்தலுக்காக, காணொலி முறையில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, ‘உத்தர பிரதேச மாநிலம் வேகமாக வளா்வதற்கு இரட்டை இயந்திர அரசுகளின் ஆட்சி அமைய வேண்டும்’ என்றாா்.

மறுபுறம், விவசாயிகள் பிரச்னை, முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசின் தோ்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை எழுப்பி சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா். மாநிலத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா் என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தலைமையில் அக்கட்சி தோ்தல் களம் காண்கிறது. அவா் வீடு வீடாகச் சென்றும், வாகனப் பேரணியில் ஈடுபட்டும் வாக்கு சேகரித்தாா். மெதுவாக தோ்தல் பணிகளைத் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி, தனது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியதை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தாா்.

முதல் கட்டத் தோ்தல் நடைபெறும் 58 தொகுதிகளுக்கு கடந்த 2017-இல் நடந்த தோ்தலில் பாஜக 53 தொகுதிகளிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

முதல் கட்டத் தோ்தல்

தொகுதிகள் 58

வேட்பாளா்கள் 623

வாக்காளா்கள் 2.27 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com