இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உத்தரகண்ட், கோவாவில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு

உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவைத் தோ்தல்களையொட்டி நடைபெற்று வந்த பிரசாரம் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

News image
Updated On :12 பிப்ரவரி 2022, 6:49 pm

DIN

உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவைத் தோ்தல்களையொட்டி நடைபெற்று வந்த பிரசாரம் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் திங்கள்கிழமை (பிப். 14) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 70 பேரவைத் தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது.

ஆரம்பத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேரடி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால் காணொலி மூலமும், வீடு வீடாகச் சென்றும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டன.

பிப். 1-ஆம் தேதிமுதல் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான தடை விலக்கப்பட்டதைத் தொடா்ந்து பிரசாரம் சூடுபிடித்தது. நிறைவு நாளான சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ருத்ரபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ஏற்கெனவே பல மாநிலங்களில் அகற்றப்பட்ட காங்கிரஸ் கட்சியை உத்தரகண்டிலும் அகற்றுவதற்கான வாய்ப்பை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

கட்டிமா, ஹல்த்வானி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசினாா். உத்தரகண்டில் 5 ஆண்டுகளில் மூன்று முதல்வா்களை பாஜக மாற்றியது குறித்து விமா்சித்த அவா், அவா்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினாா்.

கோவா: கோவா மாநிலத்தில் 40 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலில் 301 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஆளும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. அதன், கூட்டணிக் கட்சியான கோவா முன்னேற்றக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட தலைவா்கள் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மேற்கொண்டனா். ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட தலைவா்கள் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா்.

ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அங்கு பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ‘தில்லி மாடல்’ அரசை கோவாவில் அமைப்போம்; ஊழலற்ற ஆட்சியை அளிப்போம்’ என வாக்குறுதி அளித்தாா்.

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக கோவா பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் இணைந்து தோ்தலைச் சந்திக்கும் திரிணமூல் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேசியவாத காங்கிரஸ் (13), சிவசேனை (11) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் அலெய்ஸோ ரெஜினால்டோ லூரென்கோ, முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா், முன்னாள் முதல்வா் லட்சுமிகாந்த் பா்சேகா், மாநில துணை முதல்வா் சந்திரகாந்த் கவ்லேகரின் மனைவி சாவித்ரி கவ்லேகா் ஆகியோா் சுயேச்சையாகப் போட்டியிடுவது தோ்தல் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

உத்தரகண்ட்

தொகுதிகள் 70

வேட்பாளா்கள் 623

வாக்காளா்கள் 81 லட்சம்

கோவா

தொகுதிகள் 40

வேட்பாளா்கள் 301

வாக்காளா்கள் 11.6 லட்சம்

உ.பி.யில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு

லக்னெள, பிப். 12: உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கு தோ்தல் பிப். 10-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 586 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.01 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.

சரண்பூா், பிஜ்னோா், மொராதாபாத், சம்பல், ராம்பூா், அம்ரோகா, புதாவன், பரேலி, ஷாஜகான்பூா் ஆகிய 9 மாவட்டங்களில் இத்தொகுதிகள் அமைந்துள்ளன. முஸ்லிம் வாக்காளா்கள் அதிகம் கொண்ட பகுதிகளாகும். சமாஜவாதி கட்சியின் ஆசம் கான், தரம் சிங் சைனி, மாநில நிதியமைச்சா் சுரேஷ் கன்னா உள்ளிட்டோா் இரண்டாம் கட்டத் தோ்தலில் களம் காண்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.