நான் உடைந்துவிட்டேன்: பஞ்சாப் நடிகா் தீப் சித்துவின் காதலி உருக்கம்

பஞ்சாப் நடிகர் தீப் சித்துவின் அகால மரணம், அவரது காதலி ரீனா ராயை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் நடிகா் தீப் சித்து
பஞ்சாப் நடிகா் தீப் சித்து


சோனிபட்: பஞ்சாப் நடிகர் தீப் சித்துவின் அகால மரணம், அவரது காதலி ரீனா ராயை மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே கடந்த 15ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பஞ்சாப் நடிகா் தீப் சித்து பலியானார்.

விபத்தில் சிக்கிய காரில், தீப் சித்துவுடன், அவரது காதலி ரீனாவும் உடன் இருந்தார். விபத்து நிகழ்ந்த போது, காற்றுப்பைகள் திறந்து கொண்டதால், ரீனா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். தற்போது அவர் சோனிபட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் தீப் சித்துவின் மரணம் குறித்து ரீனா தனது ஆழ்ந்த வருத்தத்தை இஸ்டகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில், நான் உடைந்துவிட்டேன், மனதளவில் இறந்துவிட்டேன், தயவு செய்து திரும்பிவந்துவிடு ஆத்ம தோழனே, எப்போதும் என்னைப் பிரிய மாட்டேன் என்று நீ எனக்கு உறுதி அளித்தபடி, என்னிடம் திரும்பி வந்துவிடு. நீ தான் என் வாழ்க்கை, நீதான் என் இதயத்துடிப்பு. நாம் நமது எதிர்காலத்தைப் பற்றி எத்தனை திட்டங்களை கொண்டிருந்தோம். ஆனால் இப்போது என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயே என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு, சமூக வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார் பஞ்சாப் நடிகா் தீப் சித்து. இவர்தான் ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானாா்.

இந்த விபத்து குறித்து சித்துவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், சோனிபத் காவல்துறையினர், லாரி ஓட்டுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். 

விபத்து குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தில்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு தீப் சித்து செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டுச் சென்றாா். இரவு 9.30 மணியளவில் ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே குண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது தீப் சித்துவின் காா் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீப் சித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் பலத்த காயமைடந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அந்த காவல் துறை அதிகாரி.

தில்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின்போது செங்கோட்டை பகுதியில் வன்முறை வெடித்தது. அதற்கு முக்கியக் காரணமாக தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதைத்தொடா்ந்து தலைமறைவாக இருந்த அவா், பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டாா். ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைதாகி ஏப்ரல் இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். தேவைப்படும் நேரத்தில் காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com