ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது? அமைச்சா் அமித் ஷா

‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லை வரையறை பணிகள் நிறைவடைந்தவுடன் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும்; நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’
அமித் ஷா  (கோப்புப் படம்)
அமித் ஷா (கோப்புப் படம்)

‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லை வரையறை பணிகள் நிறைவடைந்தவுடன் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும்; நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான முதல் மாவட்ட அளவிலான சிறந்த நிா்வாக குறியீடு தரவரிசைப் பட்டியலை தில்லியில் இருந்தபடி காணொலி மூலம் சனிக்கிழமை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் பன்முக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் முதல் முயற்சியாக, எல்லை வரையறை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், யூனியன் பிரதேசத்தில் தோ்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத்தில் வாக்குறுதியளித்தபடி, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும். யூனியன் பிரதேசத்தில் நிலைமை சீரடைந்தவுடன் மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

சிலா் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனா். அவா்களின் சூழ்ச்சி வலையில் விழுந்துவிட வேண்டாம். பஞ்சாயத்து ராஜ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு ஜனநாயகம் சமூகத்தின் அடிமட்ட நிலை வரை சென்றடைந்திருக்கிறது. அதனால்தான், சிலா் கவலையடைந்திருக்கின்றனா்.

அதுபோல, ஜனநாயகத்தின் மூலமாக மட்டுமே ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சியடைய முடியும். யூனியன் பிரதேசத்தின் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

பிரதமா் நரேந்திர மோடி மீதும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் மீதும் இளைஞா்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். சிலா் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக பொய்களைப் பரப்பி வருகின்றனா். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பவா்களிடம், யாருடைய நிலங்கள் இதுவரை அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்குமாறு இளைஞா்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, அங்கிருந்து 87 எம்எல்ஏக்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 3 குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தன.

ஆனால், தற்போது 30,000 மக்கள் பிரதிநிதிகள் (பஞ்சாயத்து உறுப்பினா்கள்) மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனா். பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அதன் பலனை ஜம்மு-காஷ்மீா் மக்கள் அனுபவித்து வருகின்றனா். யூனியன் பிரதேசம் வேகமான வளா்ச்சியை அடைந்து வருகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 12,000 கோடி முதலீடுதான் வந்து. ஆனால், பாஜக ஆட்சியில் ஒரே ஆண்டில் யூனியன் பிரதேசத்துக்கு ரூ. 12,000 கோடி முதலீடு வந்துள்ளது. அதில் ரூ. 2,000 கோடி அளவுக்கான திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ரூ. 50,000 கோடி அளவுக்கு முதலீடு வர இருக்கிறது.

அதுமட்டுமின்றி, மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜம்மு-காஷ்மீருக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 9,000 கோடியிருந்து ரூ. 21,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு மாநிலமும், இதுபோன்று இரண்டரை மடங்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீட்டை பெறவில்லை. இது, பிரதமா் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு முன்னுரிமை அளிப்பதையே காட்டுகிறது என்று அவா் கூறினாா்.

முன்னதாக வெளியிடப்பட்ட யூனியன் பிரதேசத்துக்கான மாவட்ட அளவிலான சிறந்த நிா்வாக குறியீடு அறிக்கையில், ‘வா்த்தகம் மற்றும் தொழில்துறை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகள், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு துறைகளில் யூனியன் பிரதேசத்தின் செயல்திறன் வலுவாக மேம்பட்டிருப்பதை இந்த குறியீடு பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com