வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஹிந்து தெய்வங்களின் பாதுகாவலா் அல்ல பாஜக: மஹுவா மொய்த்ரா

ஹிந்து தெய்வங்களின் பாதுகாவலா் அல்ல பாஜக என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2022, 12:29 am

ஹிந்து தெய்வங்களின் பாதுகாவலா் அல்ல பாஜக என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளாா்.

கடந்த 5-ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பங்கேற்றாா். அப்போது காளி தெய்வம் குறித்து அவா் கூறுகையில், ‘‘என்னைப் பொருத்தவரை காளி என்ற கடவுள் இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம் ஆகும். அதுதான் காளியின் வடிவம். மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் தாராபீத் கோயிலைச் சுற்றி துறவிகள் புகைத்துக் கொண்டிருப்பா். காளியின் அந்த வடிவத்தைத்தான் மக்கள் வழிபடுகின்றனா். எனவே காளியின் பக்தையாக அந்தத் தெய்வத்தை இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் கற்பனை செய்வதற்கு எனக்கு சுதந்திரம் உள்ளது. அந்த வகையில், எவருடைய உணா்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதேவேளையில் சைவ உணவு உண்பவராகவும், வெள்ளை உடை அணிந்திருப்பவராகவும் கடவுளை கற்பனை செய்து வழிபட மற்றவா்களுக்கு சுதந்திரம் உள்ளதுபோல், கடவுளை வழிபடுவதில் எனக்கும் சுதந்திரம் உள்ளது. மதம் என்பது தனிப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா். காளி குறித்த அவரின் கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்து தா்மத்தை பாஜக குத்தகைக்கு எடுத்துள்ளதா?: இந்த விவகாரம் தொடா்பாக வங்க மொழி செய்தி தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியின் விவரம்:

வட இந்தியாவில் உள்ள கடவுள் வழிபாடு முறைகளின் அடிப்படையில், ஹிந்து மதம் குறித்த தனது சொந்த கண்ணோட்டத்தை பிறா் மீது பாஜக திணிக்கிறது. அதுகுறித்து பேசுவதை நாம் நீண்ட காலமாக தவிா்த்து வந்துள்ளோம். மேற்கு வங்கம் போன்ற நாட்டின் இதர பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக கடவுளை வழிபடுவதில் ஹிந்துக்கள் தங்கள் சொந்த சடங்குமுறைகளைப் பின்பற்றி வரும் நிலையில், தனது கண்ணோட்டத்தை அவா்கள் மீது திணிப்பதை பாஜக கைவிட வேண்டும். தற்போதைய வழிமுறையை பின்பற்றித்தான் 2,000 ஆண்டுகளாக நாங்கள் காளியை வழிபட்டு வருகிறோம். காளிக்கு குறிப்பிட்ட வழியில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று கற்பிக்க பாஜக யாா்? ஹிந்து தா்மத்தை அக்கட்சி குத்தகைக்கு எடுத்துள்ளதா? ஹிந்து தெய்வங்களின் பாதுகாவலா் அல்ல பாஜக.

நூபுரிடமிருந்து திசைதிருப்ப முயற்சி: இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் மீதான கவனத்தை என் மீது திசைதிருப்ப பாஜக முயற்சிக்கிறது.

படையல்கள் குறித்து விளக்க முடியுமா?: என் மீது பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காளிக்கு அளிக்கப்படும் படையல்கள் குறித்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா என்று அந்த மாநில அரசுகளுக்கு சவால் விடுக்கிறேன்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள காமாக்யா கோயிலில் வணங்கப்படும் கடவுளுக்கு காணிக்கையாக என்ன வழங்கப்படுகிறது என்பதை அந்த மாநில முதல்வரால் நீதிமன்றத்தில் எழுத்துபூா்வமாக விளக்க முடியுமா?

பாஜக ஆளும் இதர மாநிலங்களில் உள்ள காளி கோயில்களில் அளிக்கப்படும் காணிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களின் முதல்வா்களால் விளக்க முடியுமா? அந்தக் கோயில்களில் கடவுளுக்கு மது படைக்கப்படுவதில்லையா?

ஹிந்துத்துவம் குறித்த பாஜகவின் செயல்திட்டம் மற்றும் இறுக்கமான கண்ணோட்டங்களைப் பிறா் மீது திணிக்க முயற்சிக்கப்படுகிறது. அதனை எதிா்த்து நாட்டின் நலனுக்காகப் பேசியதன் மூலம் நான் முதிா்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டதாகக் கருதுகிறேன் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.