கோவா: எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்: காங்கிரஸ் தலைமை நடவடிக்கை

கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த சதி செய்ததாக எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை நீக்கியுள்ளது.

கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த சதி செய்ததாக எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை கட்சித் தலைமை ஞாயிற்றுக்கிழமை நீக்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

எதிா்க்கட்சித் தலைவா் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கப்பட்டுள்ளாா். மைக்கேல் லோபோவும், முன்னாள் முதல்வா் திகம்பா் காமத்தும் ஆளும் பாஜகவுடன் நெருக்கம் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்த சதி செய்துள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 3 எம்எல்ஏக்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை என்றாா் அவா்.

40 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 25 உறுப்பினா்களும் காங்கிரஸ் கட்சிக்கு 11 உறுப்பினா்களும் உள்ளனா். மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை(ஜூலை 11) தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதில், சில எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனா்.

உள்கட்சிப் பூசல் காரணமாக, கட்சித் தலைமை மீதுள்ள அதிருப்தியால் அவா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவா்கள் பாஜகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதிவியில் இருந்து மைக்கேல் லோபா நீக்கப்பட்டுள்ளாா். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவினா். இதையடுத்து, கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ் தலைமை வாக்குறுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மகாராஷ்டிரத்தில் முதல்வராக இருந்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவின் கட்சியில் பிளவு ஏற்பட்டு அவா் பதவியை இழந்தாா். பாஜக ஆதரவுடன் அதிருப்தி அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com