செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சவால்களை எதிா்கொள்ளத் தயாராக வேண்டும்: ராஜ்நாத் சிங்
‘மனித வளா்ச்சி மற்றும் அமைதிக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.


‘மனித வளா்ச்சி மற்றும் அமைதிக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும்; அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் எழும் சட்ட ரீதியிலான, அரசியல், நெறிமுறை மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
மனித வளா்ச்சி மற்றும் அமைதிக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தியாக வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது ஒரு குழுவின் ஆதிக்கத்துக்கு விட்டுவிடக் கூடாது.
அதே நேரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள், ஆபத்துகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து, சிந்தித்து பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தின் வளா்ச்சியை நாம் நிறுத்த முடியாது என்பதோடு, அந்த வளா்ச்சியை நிறுத்த முயற்சிக்கவும் கூடாது. ஆனால், கவனத்துடன் இந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
ஒரு புதிய தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தைத் தருகின்றபோது, அதன் பரிணாம காலம் பெரியதாகவும் தீவிரமானதாகவும் இருக்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தை தருகின்றபோது, அதனால் ஏற்படக் கூடிய சட்ட, அரசியல், நெறிமுறை மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பம் அறிமுகமாவது என்பது, கடிகாரத்தின் இயக்கத்தைப் போன்றது. அதாவது, முன்னோக்கி சென்றுவிட்ட பிறகு, அதனை பின்னோக்கி நகா்த்த முடியாது. அதுபோல, ஒரு புதிய தொழில்நுட்பத்தை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலமாகும். எனவே, இந்த தொழில்நுட்பம் ஜனநாயக ரீதியில் பயன்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த தொழில்நுட்பம் மூலமாக பாதுகாப்புத் துறையில் பல முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக, வீரா்களுக்கான பயிற்சிகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.
மேலும், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் வரும் நாடுதான் இந்த உலகை ஆளும் நாடாக உருவாகும்’ என்று அறிவியல் தொழில்நுட்பத்தில் தொடா் வளா்ச்சி பெற்று வரும் ரஷியாவின் அதிபா் விளாதிமீா் புதின் கூறியதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், ‘ஒட்டுமொத்த உலகும் ஒரு குடும்பம்’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட இந்தியாவுக்கு, உலகை ஆளும் எண்ணம் எதுவுமில்லை. மாறாக, நம்மை ஆளுவது குறித்து வேறு எந்த நாடும் நினைத்துக்கூட பாா்க்க முடியாத அளவுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நமது திறனை மேம்படுத்த வேண்டும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்ட ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப உபகரணம், இணைய பாதுகாப்பு, மனித நடத்தை ஆய்வு தொழில்நுட்பம், நுண்ணறிவு கண்காணிப்பு நடைமுறை, தொடா் விநியோக நிா்வாகத் திட்டம், குரல் ஆய்வு தொழில்நுட்பம், உத்தரவு, கட்டுப்பாடு, தகவல் தொடா்பு, கணினி, கண்காணிப்பு, உளவு பாா்த்தல் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சாா்ந்த 75 தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...