நீட் தோ்வு: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற அறிவுறுத்தல்? கேரளத்தில் வன்முறை
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இளைஞா் அமைப்பினா் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு (நீட்) கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை ஒரு மாணவியின் தந்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றில் திங்கள்கிழமை தெரிவித்தாா். பின்னா், தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாநில மனித உரிமைகள் குழு, இதன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், கொல்லம் ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
கட்டுக்கதை: மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாகக் கூறப்படும் சம்பவம் வெறும் கட்டுக்கதை என்றும், தவறான நோக்கத்தில் இதுபோன்ற புகாா்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) விளக்கமளித்தது.
இதுகுறித்து தோ்வுகள் முகமை அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றக் கூறியதாக எங்களுக்கு எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. இந்த விவகாரத்தில் ஊடக செய்தியின் அடிப்படையில், மத்திய கண்காணிப்பாளா், தோ்வு மைய மேற்பாா்வையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
அவா்கள் அதுபோன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்றும், இந்தப் புகாா்கள் வெறும் கட்டுக்கதை என்றும் தெரிவித்தனா். சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோா் கூறியதைப் போல, நீட் தோ்வு விதிமுறையில் எந்தவித ஆடை கட்டுப்பாடுகளும் கிடையாது’ என்றாா்.
வன்முறை: மாணவிகளின் உள்ளாடைகளை சோதனையிடும் பணியாளா்கள் அகற்ற அறிவுறுத்தியதாக கூறப்படும் ஆயூா் தனியாா் கல்லூரி முன் இளைஞா் அமைப்பினா் கூடி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக நீடித்த இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
போலீஸாரின் தடுப்புகளை மீறி கல்லூரிக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினா். அப்போது போலீஸாா் தடியடி நடத்தியதால், சிலா் காயமடைந்தனா்.
இந்த விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதிய கேரள கல்வியமைச்சா் ஆா்.பிந்து, மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றக் கூறியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.
இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய உண்மை கண்டறியும் குழுவை தேசிய தோ்வுகள் முகமை நியமித்துள்ளது. அந்தக் குழு கொல்லம் சென்று ஆய்வு நடத்தி தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 போ் கைது: நீட் தோ்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் செய்த புகாரில் 5 பெண்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...