மத்திய அரசில் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள்- அமைச்சா் ஜிதேந்திர சிங் தகவல்

மத்திய அரசில் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள்- அமைச்சா் ஜிதேந்திர சிங் தகவல்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமாா் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
Published on

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமாா் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

செலவினத் துறையின் வருடாந்திர ஊதிய ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வரையில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 40,35,203. இதில் சுமாா் 30.55 லட்சம் போ் பணியில் உள்ளனா். சுமாா் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி ஓய்வு, பதவி உயா்வு, பணிவிலகல், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலிப் பணியிடங்கள் உருவாகின்றன.

மத்திய அரசில் புதிய பணியிடங்களை உருவாக்குவதும் நியமனம் செய்வதும் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையின் பொறுப்பாகும். இது தொடா்ச்சியான நடைமுறையாகும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றாா் ஜிதேந்திர சிங்.

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை நியமனம் செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சகங்கள், துறைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவுறுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com