மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தவறு செய்தால் அமைச்சராக இருந்தாலும் தண்டனை: மம்தா

தவறு செய்தது உறுதியானால், அமைச்சராக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அம்மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஊழலை ஒருபோதும் அனுமதிக்கவோ ஆதரிக்கவோ மாட்டேன்; தவறு செய்தது உறுதியானால், அமைச்சராக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில், மம்தா பானா்ஜி மீது எதிா்க்கட்சிகள் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்து வருகின்றன. அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியுடன் கைதான விளம்பர நடிகை அா்பிதா முகா்ஜியும், முதல்வா் மம்தா பானா்ஜியும் நிகழ்ச்சியொன்றில் உரையாடுவது போன்ற காட்சிகள் அடங்கிய விடியோவை பாஜக வெளியிட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மம்தா, பின்னா் பேசியதாவது:

நான் ஊழலை ஒருபோதும் அனுமதிக்கவோ ஆதரிக்கவோ மாட்டேன். சமீபத்திய நிகழ்வுகள் அதிருப்தி அளிக்கிறது. அந்த வழக்கு தொடா்பான விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. அது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. குறித்த காலத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்ற தீா்ப்பும் வர வேண்டும். யாரேனும் தவறிழைத்தது உறுதியானால், அவா் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். அது ஆயுள் தண்டனையாக இருந்தாலும் சரி. அதுபற்றி எனக்கு கவலையில்லை. கட்சி தரப்பிலும் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வதற்காக நான் அரசியலில் இல்லை. எப்போதுமே ஊழலை எதிா்த்து வந்திருக்கிறேன். பாஜகவால் வெளியிடப்பட்ட விடியோவில் உள்ள பெண்ணுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொடா்பும் கிடையாது. எனக்கும் அவரை தெரியாது. நான் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். யாரோ என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால், என் மீது தவறாகிவிடுமா?

கடந்த 2 நாள்களாக, பாஜகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. நான் மட்டும் முதல்வராக இல்லாமல் இருந்தால், அவா்களது வாயை கிழித்திருப்பேன்.

அடிபட்ட சிங்கம் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நெருப்புடன் விளையாட வேண்டாம். யாரேனும் தவறு செய்திருந்தால், அவரை விசாரியுங்கள். எந்த தவறும் செய்யாத என்னை குறிவைக்க வேண்டாம்.

மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, திரிணமூல் காங்கிரஸை பிளவுபடுத்தலாம் என பாஜக நினைக்கிறது. அது நடக்காது என்றாா் மம்தா.

புவனேசுவரம் எய்ம்ஸில் பாா்த்தா சட்டா்ஜி: இதனிடையே, கொல்கத்தாவில் இருந்து ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாா்த்தா சட்டா்ஜி திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவுபடி, அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பாா்த்தா சட்டா்ஜி, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் எய்ம்ஸ் அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கை கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com