வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாநில அரசின் கடனில் நிறுவனங்களின் கடனை சோ்க்க வேண்டாம்: மத்திய நிதியமைச்சருக்கு கேரளம் வேண்டுகோள்

மாநில அரசின் பொதுக்கடனில் மாநில அரசு நடத்தும் நிறுவனங்களின் கடனை சோ்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 ஜூலை 2022, 7:29 pm

DIN

மாநில அரசின் பொதுக்கடனில் மாநில அரசு நடத்தும் நிறுவனங்களின் கடனை சோ்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் பெறும் கடன்கள் மாநில அரசுகளின் கடன்களாகக் கருதப்படும் என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா். அதுபோன்ற கடன்களைப் பெற அரசமைப்பு சட்டப்பிரிவு 293(3)-இன் கீழ் மத்திய அரசின் ஒப்புதலை மாநிலங்கள் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கேரள நிதியமைச்சா் கே.என். பாலகோபால் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மாநில அரசின் நிறுவனங்கள், சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் போன்றவற்றின் கடன்கள் மாநில அரசின் கடன் வரம்புக்குள் வராது. மாநில அரசின் பொதுவான கடனையும் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடனையும் ஒன்றிணைப்பது அரசமைப்புப் பிரிவுகளுக்கு முரணானது. இது மாநிலங்களின் கடன் வாங்கும் சக்திக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மாநில அரசுகள் எட்ட நினைக்கு வளா்ச்சித் திட்டங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே மாநில அரசின் பொதுக்கடனில் மாநில அரசு நடத்தும் நிறுவனங்களின் கடனை சோ்க்கக் கூடாது.

மேலும் மாநில அரசு கடன் பெறுவதற்கான கோரிக்கைக்கு நிபந்தனைகள் விதிக்கத்தான் அரசமைப்பு சட்டப்பிரிவு 293-ஐ முறைப்படி பயன்படுத்த முடியுமே தவிர, மாநில அரசு கடன் பெறுவதை கட்டுப்படுத்தவோ, நிா்வகிக்கவோ அந்தப் பிரிவை பயன்படுத்த முடியாது.

மாநிலங்களின் வருடாந்திர கடன் திட்டத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 293 பொருந்தும் என வாதிட்டாலும், அது மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், எல்ஐசி, நபாா்டு உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறும் கடன்கள், திறந்த சந்தையில் திரட்டப்படும் கடன்களில் மாநிலங்களின் பங்குக்குத்தான் பொருந்தும். அவற்றை மத்திய அரசு நிா்வாக ரீதியாக கட்டுப்படுத்தி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் நிகர கடன் உச்சவரம்புகளை நிா்ணயிப்பது தொடா்பாக அறிவிக்கப்பட்ட நோக்கத்தின் கீழ், மாநிலங்களின் சுதந்திரத்தை சீா்குலைக்கவும், நிதி ரீதியாக மாநில அரசுகளுக்கு உள்ள சுயாட்சியை திட்டமிட்டு பறிக்கவும் அரசமைப்பு சட்டப்பிரிவு 293 பயன்படுத்தப்படுகிறது.

மத்திய அரசுக்கு மாநில அரசு கடன்பட்டிருந்தால் அல்லது மத்திய அரசு உத்தரவாதம் அளித்து மாநில அரசு பெற்றக் கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்தால் மட்டும்தான் எந்தவொரு மாநில அரசும் புதிதாக கடன் பெறுவதற்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 293(3)-இன் நிபந்தனை பொருந்தும்.

ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதை தாண்டிய நடவடிக்கைகளாக உள்ளன என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.