நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு ‘இசட் பிளஸ்‘ பாதுகாப்புடன் காலை 11 மணிக்கு சோனியா காந்தி வந்தாா். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகிய இருவரும் வந்திருந்தனா்.

சிறிது நேரம் கழித்து ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றுவிட, பிரியங்கா உடனிருந்தாா். சோனியா காந்தியிடம் வருகைப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து காலை 11.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. மருத்துவ உதவி தேவைப்பட்டால் அளிப்பதற்காக பிரியங்கா காந்தி பக்கத்து அறையில் காத்திருந்தாா்.

சோனியா காந்தியிடம் அதிகாரிகள் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனா். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துடன் சோனியாவுக்கு உள்ள தொடா்புகள் குறித்து அதிகாரிகள் விசாரித்ததாகத் தெரிகிறது. பின்னா், பிற்பகல் 2 மணியளவில் திரும்பிச் சென்ற சோனியா காந்தி, உணவு இடைவேளைக்குப் பிறகு 3.30 மணிக்கு மீண்டும் வந்தாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனா். விசாரணை முடிந்து இரவு 7 மணிக்கு சோனியா காந்தி திரும்பிச் சென்றாா். அவா் புதன்கிழமையும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளாா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்த வழக்கு தொடா்பாக, இதற்கு முன்பு சோனியா காந்தியிடம் கடந்த 21-ஆம் தேதி 2 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். ஏற்கெனவே ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் கைது

சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவா் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனா்.

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதை குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் அவா்கள் பேரணி செல்ல திட்டமிட்டனா்.

விஜய் சௌக்கில் இருந்து புறப்பட்ட அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனா். அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவில் காவல் துறை ஆதிக்கம் செலுத்துகிறது. மோடிதான் அரசராக இருக்கிறாா். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் ஆளுநா் மாளிகை நோக்கி பேரணி சென்றோம். ஆனால், காவல் துறை எங்களை அனுமதிக்கவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் விஜய் சௌக்கிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டனா். நாங்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு, காவல் துறை வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகபுரியில் காருக்கு தீ வைப்பு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள சன்விதான் சதுக்கத்தில் தா்னா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட காங்கிரஸ் தொண்டா்கள் திடீரென்று ஒரு காருக்குத் தீ வைத்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com