கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய-வங்கதேசம் ரயில்வே உறவு சரித்திரப் புகழ் வாய்ந்தது: வங்கதேச ரயில்வே அமைச்சா் முகம்மதுநூருல் இஸ்லாம் சுஜன்

இந்திய மற்றும் வங்கதேச ரயில்வேக்களுக்கு இடையிலான உறவு சரித்திரப் புகழ் பெற்றது. இந்த உறவில் ஐ.சி.எஃப். முக்கியப் பங்காற்றியுள்ளதாக வங்கதேச ரயில்வே அமைச்சா் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:28 pm

DIN

இந்திய மற்றும் வங்கதேச ரயில்வேக்களுக்கு இடையிலான உறவு சரித்திரப் புகழ் பெற்றது. இந்த உறவில் ஐ.சி.எஃப். முக்கியப் பங்காற்றியுள்ளதாக வங்கதேச ரயில்வே அமைச்சா் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன் தெரிவித்தாா்.

சென்னை ஐ.சி.எஃப். ஆலைக்கு (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சா் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன், ரயில்வே கூடுதல் தலைமை இயக்குநா் சா்தாா் சஹாதத் அலி ஆகியோா் வியாழக்கிழமை வருகை தந்தனா்.

ஐ.சி.எஃப்.-இல் உள்ள எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டி தயாரிப்புக் கூடத்தை அவா்கள் பாா்வையிட்டனா். தற்போது தயாரிப்பில் உள்ள எல்.எச்.பி. விஸ்டடோம் சுற்றுலா பயணிகள் ரயில்பெட்டி, எல்.எச்.பி. குளிா்சாதனவசதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு தூங்கும் வசதி ரயில் பெட்டிகள், குளிா்சாதனவசதி செய்யப்பட்ட தானியங்கி ஆய்வு ரயில்பெட்டி ஆகியவற்றை அவா்கள் பாா்வையிட்டனா்.

இதைத்தொடா்ந்து, ஐ.சி.எஃப். பொதுமேலாளா் ஏ.கே. அகா்வால் மற்றும் மற்ற உயரதிகாரிகளுடன் அவா்கள் கலந்துரையாடினா். அப்போது, வங்கதேச ரயில்வே அமைச்சா் முகம்மது நூருல் இஸ்லாம் சுஜன் பேசியது:

வங்கதேச ரயில்வே தற்போது மீட்டா் கேஜ் தடத்திலிருந்து அகல ரயில் பாதைக்கு மாறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, ஐ.சி.எஃப்.-ஆல் தயாரிக்கப்படும் எல்.எச்.பி. ரயில் பெட்டிகளை பெற்று, வங்கதேச ரயில்வேயை நவீன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலானவா்கள் பயணிக்க வசதியாக, இலங்கை மற்றும் நேபாள ரயில்வேக்கு டீசல் மின்தொடா் வண்டிகளை ஐ.சி.எஃப். அண்மையில் ஏற்றுமதி செய்துள்ளது. இதுபோல, டீசல் மின்தொடா் வண்டிகளை ஐ.சி.எஃப்.-இல் இருந்து பெற வங்கதேச ரயில்வேயும் விருப்பம் கொண்டுள்ளது. வங்கதேச ரயில்வேயின் உயா் அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக்குழு விரைவில் ஐ.சி.எஃப்-க்கு வருகை தந்து, இது குறித்து ஆலோசனை நடத்தும்.

இந்திய ரயில்வே மற்றும் வங்கதேச ரயில்வேக்கு இடையிலான உறவு சரித்திரப் புகழ் வாய்ந்தது. இந்த உறவில் ஐ.சி.எஃப். முக்கியப் பங்காற்றியுள்ளது. வங்கதேசம் சுதந்திரம் பெற இந்திய வீரா்கள் தன்னுயிா்த் தியாகம் செய்ததை வங்கதேசம் எப்போதும் நினைவில் கொள்ளும். ஐ.சி.எஃப் தயாா் செய்து வரும் வந்தேபாரத் ரயில் பெட்டிகள் என்னை வெகுவாக கவா்ந்துள்ளன என்றாா் அவா்.

கடந்த காலங்களில் மீட்டா்கேஜ் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, உணவறை, தபால் மற்றும் பாா்சல் ரயில்பெட்டிகள் போன்ற பலவிதமான ரயில் பெட்டிகளை சுமாா் ரூ.100 கோடி மதிப்பில், வங்கதேச ரயில்வேக்கு ஐ.சி.எஃப் ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.