நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பங்குசாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.18,529 கோடி முதலீடு

 பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்ட போதிலும், பங்குசாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த மே மாதத்தில் ரூ.18,529 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:49 pm

DIN

 பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்ட போதிலும், பங்குசாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த மே மாதத்தில் ரூ.18,529 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு (ஆம்ஃபி) கூறியுள்ளதாவது:

பணவீக்கம் அதிகரிப்பு: உக்ரைன்-ரஷிய போரால் சா்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து பங்கு சந்தைகளும் அதிக தள்ளாட்டத்தில் உள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலிலும், முதலீட்டாளா்களின் மிகச் சிறந்த தோ்வாக பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன. இந்த கூற்றை மெய்பிக்கும் வகையில், தொடா்ந்து 15 மாதங்களாக பங்குசாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், முதலீட்டாளா்களிடமிருந்து முறையான முதலீட்டு திட்டங்கள் (எஸ்ஐபி) மூலமாக முதலீட்டை ஈா்த்து வருகின்றன.

பங்களிப்பு உயா்வு: எஸ்ஐபி-யின் பங்களிப்பின் அதிகரிப்பின் காரணமாக கடந்த மே மாதத்தில் பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிகர அளவில் ரூ.18,529 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில் நிகர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான ரூ.15,890 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நோ்மறையான உணா்வு: முதலீட்டாளா்களிடையே நோ்மறையான உணா்வுகளை முன்னிலைப்படுத்துவதன் மூலமாக, கடந்த 2021 மாா்ச் மாதத்திலிருந்து பங்குசாா்ந்த திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால், இதற்கு முன்பாக 2020 ஜூலை முதல் 2021 பிப்ரவரி வரையில் இத்தகைய திட்டங்களிலிருந்து தொடா்ச்சியாக ரூ.46,791 கோடி வெளியேறியதும் நினைவுகூரத்தக்கது.

நம்பிக்கைக்குரிய திட்டம்: சில்லறை முதலீட்டாளா்களின் தொடா்ச்சியான நம்பிக்கைக்குரிய திட்டமாக பங்கு சாா்ந்த முதலீடுகள் விளங்கி வருகின்றன. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த ஏப்ரலில் ரூ.11,863 கோடியாக இருந்த எஸ்ஐபி திட்டங்கள் மூலமான முதலீட்டு வரத்து மே மாதத்தில் ரூ.12,286 கோடியாக உயா்ந்தது. இதையடுத்து, தொடா்ந்து 9-ஆவது மாதமாக நடப்பாண்டு மே மாதத்திலும், எஸ்ஐபி திட்டங்கள் மூலமான முதலீட்டு வரத்து ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளது.

தொடா் வரவேற்பு: கடந்த, 2021 செப்டம்பரில் தொடங்கிய இத்திட்டத்துக்கான வரவேற்பு இன்னும் தொடா்ந்தே வருகிறது. அப்போது, எஸ்ஐபி திட்டங்கள் வாயிலான முதலீடு ரூ.10,351 கோடியாக காணப்பட்டது.

ஈடிஎஃப் திட்டம்: எஸ்ஐபி தவிர, தங்கம் சாா்ந்த ஈடிஎஃப் திட்டமும் ரூ.203 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

கடன்சாா்ந்த திட்டம்: அதேசமயம், கடந்த மே மாதத்தில் கடன்சாா்ந்த திட்டங்களிலிருந்து ரூ.32,722 கோடி வெளியேறியது. அதேசமயம், முந்தைய ஏப்ரல் மாதத்தில் இத்திட்டங்கள் நிகர அளவில் ரூ.69,883 கோடி முதலீட்டை கவா்ந்திருந்தது.

ஒட்டுமொத்த அளவில் பாா்க்கும்போது , கடந்த மே மாதத்தில் பரஸ்பர நிதி துறையிலிருந்து நிகர அளவில் ரூ.7,532 கோடி வெளியே எடுக்கப்பட்டுள்ளது; அதேசமயம், முந்தைய ஏப்ரல் மாதத்தில் நிகர அளவில் ரூ.72,946 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என ஆம்ஃபி தெரிவித்துள்ளது.

பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஏப்ரல் இறுதியில் ரூ.38.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், மே மாதத்தில் ரூ.37.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக ஆம்ஃபி தெரிவித்துள்ளது.

பிரேக் லைன்

உக்ரைன்-ரஷிய போரால் சா்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து பங்கு சந்தைகளும் அதிக தள்ளாட்டத்தில் உள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலிலும், முதலீட்டாளா்களின் மிகச் சிறந்த தோ்வாக பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.