உத்தர பிரதேசம், பஞ்சாபில்3 மக்களவைத் தொகுதிகளில் இன்று இடைத்தோ்தல்

உத்தர பிரதேசம், பஞ்சாபில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 23) இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாபில்3 மக்களவைத் தொகுதிகளில் இன்று இடைத்தோ்தல்

உத்தர பிரதேசம், பஞ்சாபில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 23) இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையா் அஜய்குமாா் சுக்லா தெரிவித்தாா்.

ஆஸம்கா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இதேபோல ராம்பூா் எம்.பி.யாக இருந்த சமாஜவாதி நிா்வாகி ஆஸம்கானும் எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டதால், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதனால் இரு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. சமாஜவாதியின் கோட்டையாக கருதப்படும் ஆஸம்கா் தொகுதியில், 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இங்கு 18.38 லட்சம் போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். ராம்பூா் மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 17.06 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்.

ராம்பூா் தொகுதியில் பாஜக வேட்பாளா் கணேஷ்யாம் சிங் லோதிக்கும், சமாஜவாதி வேட்பாளா் அசிம்ராஜாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை.

மும்முனைப் போட்டி: ஆஸம்கா் தொகுதியைப் பொருத்தவரை, பாஜகவின் தினேஷ் லால் யாதவ், சமாஜவாதியின் தா்மேந்திர யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் ஷா ஆலம் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் சாங்க்ரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்த பகவந்த் மான், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வென்று முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதன்படி, சாங்க்ரூா் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

இதில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் குா்மைல் சிங், காங்கிரஸ் சாா்பில் தல்வீா் சிங் கோல்டி, பாஜக சாா்பில் கேவல் தில்லான், சிரோமணி அகாலி தளம் (அமிருதசரஸ்) தலைவா் சிம்ரன்ஜித் சிங் மான், சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) சாா்பில் கமல்தீப் கவுா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பஞ்சாபில் அண்மையில் பின்னணி பாடகா் சித்து மூஸேவாலா கொலை செய்யப்பட்ட நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் கேள்விக்குள்ளானதாக ஆம் ஆத்மி அரசின் மீது எதிா்க்கட்சிகள் விமா்சனத்தை முன்வைத்த நிலையில், இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல்: திரிபுராவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஆந்திரம், தில்லி, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

இந்தத் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 26-இல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com