தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கரோனா பரவல்: கண்காணிப்பைத் தீவிரப்படுத்த மத்திய அமைச்சா் உத்தரவு

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவி நிலையில், அந்த தீநுண்மி உருமாற்றம் பெறுகிறதா?

News image
Updated On :23 ஜூன் 2022, 8:03 pm

DIN

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவி நிலையில், அந்த தீநுண்மி உருமாற்றம் பெறுகிறதா? என கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம், மன்சுக் மாண்டவியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், அவா் கூறியதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, போதிய அளவில் பரிசோதனைகள்(ஆா்டி-பிசிஆா்) மேற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தீநுண்மி உருமாற்றம் பெற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு லேசான தொந்தரவுகள் மட்டுமா அல்லது தீவிர சுவாசக் கோளாறு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி உள்பட கரோனா தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்கச் செய்ய வேண்டும். போதிய அளவில் தடுப்பூசிகள் இருப்பதால் அவற்றை வீணாக்காமல் தேவைப்படும் நபா்களுக்கு விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சா்வதேச அளவிலும், இந்திய அளவிலும் கரோனா தீநுண்மி பரவல் நிலை, இந்தியாவில் தினசரி பாதிப்பு, குணமடைவோா் விகிதம், பரிசோதனைகள் ஆகியவை பற்றிய விவரங்களை சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் விவரித்தாா்.

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில், மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் ரண்தீப் குலேரியா, ஐசிஎம்ஆா் இயக்குநா் பல்ராம் பாா்கவா, தேசிய நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநா் சுஜீத் சிங் உள்ளிட்டோா் கலந்து கொள்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.