

ஹைதராபாத்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பொதுமுடக்கத்தில் சிக்கிக் கொண்ட தனது மகனை மீட்க, 1,400 கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று அழைத்து வந்த தாய், இன்று அதே மகன் உக்ரைனிலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
அன்று உள்நாட்டிலேயே இருந்ததால், 1,400 கிலோ மீட்டர் என்று கூட பார்க்காமல், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இன்றோ, வேறொரு நாட்டில் சிக்கியிருப்பதால், எதுவும் செய்ய முடியாமல், கண்ணீருடன் காத்திருக்கிறார் மகனைக் காண.
ரஸியா பேகம், தெலங்கானாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது 19 வயது மகனின் பாதுகாப்பைக் கருதி கவலையோடு காத்திருக்கிறார்.
உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு பயிலச் சென்ற மகன் நிஸாமுதீன் அமன், அங்கு சிக்கியிருக்கும் நிலையில், அவர் எப்போது தாயகம் திரும்புவார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.
ரஷிய படைகளின் தொடர் ஏவுகணை தாக்குதலால், நிலைகுலைந்திருக்கும் சுமியின் பதுங்குக் குழிகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமி நகரம், உக்ரைனின் மற்ற நகரங்களிலிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதும், அதிலிருக்கும் மாணவர்களை மீட்க முடியாமல் போயிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுமுடக்கத்தின் போது, ஆந்திர மாநிலத்தில் சிக்கிக் கொண்ட மகனை மீட்க, இரு சக்கர வாகனத்தில், அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட, இரவு நேரத்திலும் பயணம் செய்து மீட்டு வந்தது, ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது.
தன்னந்தனியாக, ஒரு பெண், எத்தனையோ இடர்களைக் கடந்துச் சென்று 1,400 கி.மீ. பயணித்து, தனது மகனை மீட்டு வந்தார். இன்றும் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மகனை மீட்க கிளம்பிவிடுவார். ஆனால், அவரோ வேற்று நாட்டில் அல்லவா சிக்கியிருக்கிறார். கண்ணீர் மட்டுமே இப்போது அவருக்கு உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.