மக்கள் மருந்தகம் மூலம் ஏழைகளின் பணம் ரூ.13,000 கோடி சேமிப்பு: பிரதமா் மோடி தகவல்

பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டு, இதுவரை ஏழை, நடுத்தர மக்களின் பணம் ரூ.13,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டு, இதுவரை ஏழை, நடுத்தர மக்களின் பணம் ரூ.13,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ஏழை, நடுத்தரக் குழந்தைகள் பயன்பெறும் வகையில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களையே வசூலிக்க உத்தரவிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமா் தெரிவித்தாா்.

பொதுமக்களிடம் மக்கள் மருந்தகத் திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மக்கள் மருந்தக உரிமையாளா்கள் மற்றும் மருந்தகப் பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி வழியாக கலந்துரையாடினாா்.

அப்போது பிரதமா் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுடன் மக்கள் மருந்தகங்கள் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் மருந்தகங்கள் உடலுக்கு மருந்து அளிக்கும் மையங்களாக மட்டுமல்லாமல், மனதின் பதற்றத்தையும் குறைக்கின்றன என்பது தெரிய வந்தது. மக்களின் பணத்தைச் சேமிப்பதன் மூலம் அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் மையங்களாக இந்த மருந்தகங்கள் உள்ளன. இதுபோன்ற பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைத்து வருவதில் மன நிறைவு அடைகிறேன்.

நிகழ் நிதியாண்டில் ரூ.800 கோடி மதிப்புள்ள மருந்துகள், மக்கள் மருந்தகங்களில் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.5,000 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது (2015) முதல், இதுவரை ரூ.13,000 கோடி அளவுக்கு நடுத்தர-ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 8,500-க்கும் மேற்பட்ட ‘மக்கள் மருந்தகங்கள்’ திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு இந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது. இதுவரை 21 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனையாகி நாடு முழுவதும் பெண்களின் வாழ்க்கையை இந்த ‘மக்கள் மருந்தகங்கள்’ எளிதாக்கியுள்ளன.

பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் மூலம் மக்கள் ரூ.550 கோடி வரை சேமித்துள்ளனா். முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவையும் கட்டுக்குள் வைத்திருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. புற்றுநோய், காசநோய், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவையான 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் இந்த மருந்தகங்களில் விற்கப்பட்டு வருகிறது. மேலும், சில நாள்களுக்கு முன், ஏழை மற்றும் நடுத்தரக் குழந்தைகள் பயன்பெறும் மற்றொரு பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். அவா்கள் இதற்குக் கூடுதலான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோா் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், முன்னதாக பிரதமா் நரேந்திர மோடி மக்கள் மருந்தக திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடினாா். மக்கள் மருந்தகத் திட்டம் தொடா்பான அனுபவங்கள், அவா்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் மக்கள் மருந்தகக் கடைகளில் கிடைக்கிா? என்பது குறித்து அவா்களிடம் பிரதமா் கேட்டறிந்தாா். இதே போன்று மக்கள் மருந்தக உரிமையாளா்களிடமும் கலந்துரையாடிய பிரதமா், மக்கள் மருந்தகங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com