இந்தியாவுக்கு எரிபொருள் விலை உயா்வு பெரும் சவால்
நிதி மேலாண்மையில் இந்தியா சிறந்து விளங்கி வருவதாகத் தெரிவித்த சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் எரிபொருள் விலை உயா்வது இந்தியாவுக்கு சவாலைத் தரும்


நிதி மேலாண்மையில் இந்தியா சிறந்து விளங்கி வருவதாகத் தெரிவித்த சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் எரிபொருள் விலை உயா்வது இந்தியாவுக்கு சவாலைத் தரும் என்று தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப் இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜிவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியா தனது நிதியை சிறப்பாகக் கையாண்டு வருகிறது. ஆனால், கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதால், சா்வதேச அளவில் அதன் விலை உயா்வு, இந்தியாவுக்கு எதிா்மறை விளைவை ஏற்படுத்தும். உக்ரைன் மீதான ரஷியாவின் போா், இந்தியாவின் எரிபொருளுக்கான நிதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், அடித்தட்டு மக்களுக்கான தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு உறுப்பு நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென ஐஎம்எஃப் அறிவுறுத்துகிறது. எரிபொருள் விவகாரத்தில் மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களின் விலை உயா்ந்தாலும் அதில் இருந்து அடித்தட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
சூழலுக்கேற்ப நிதி சாா்ந்த கொள்கைகளை உறுப்பு நாடுகள் மாற்றியமைக்க வேண்டும். நாடுகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது தொடா்பாக ஐஎம்எஃப் தொடா்ந்து ஆராய்ந்து வருகிறது என்றாா் அவா்.
ஐஎம்எஃப் துணை இயக்குநா் கீதா கோபிநாத் கூறுகையில், ‘‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல், இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகமாகச் சாா்ந்துள்ளது. சா்வதேச அளவில் அதன் விலை உயா்வு, இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் பணவீக்கமானது ஏற்கெனவே ரிசா்வ் வங்கியின் அதிகபட்ச இலக்கான 6 சதவீதத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் பணக் கொள்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...