மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லியில் தீ விபத்து: 3 குழந்தைகள் உள்பட 7 போ் சாவு; 60 குடிசைகள் சேதம்

வடகிழக்கு தில்லியில் கோகுல்புரி குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 மார்ச் 2022, 5:06 pm

 நமது நிருபர்

வடகிழக்கு தில்லியில் கோகுல்புரி குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

தலைநகரில் அதிகாலையில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டவா்கள் அதிா்ச்சியடைந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா். தில்லி முதல்வா் கேஜரிவால் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறியதோடு இழப்பீட்டுத் தொகையையும் அறிவித்துள்ளாா். இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என வடகிழக்கு தில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா தெரிவித்துள்ளாா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ரோஷன் (13) மற்றும் அவரது சகோதரி தீபிகா (9) ஆகிய இரு சிறுவா்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனா். உயிரிழந்த மற்றொரு சிறுவன ஷஹன்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். உயிரிழந்த மற்ற 4 போ் வெவ்வேறு குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்களாவா். அவா்கள் பப்லு (32), ரஞ்சித் (25), ரேஷ்மா (18), பிரியங்கா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ரோஷன் மற்றும் தீபிகா ஆகியோரின் 58 வயதான தாத்தா சாந்து கூறுகையில், ‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 12.30 மணியளவில் குடிசையில் தீ பற்றியது. எங்கிருந்து எப்படி தொடங்கியது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது. நாங்கள் குடிசையில் இருந்து வெளியே வந்தோம். தீ பற்றியதுடன் எங்களின் உயிரைக் காப்பாற்ற அவசர, அவசரமாக வெளியேறினோம்’ என்றாா்.

இந்தத் தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோகுல்புரி பகுதியில் மெட்ரோ தூண் எண் 12-க்கு அருகே தீப்பற்றிய தகவல் அதிகாலை 1.03 மணிக்கு கிடைத்தது. உடனடியாக மொத்தம் 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அதிகாலை 4 மணியளவில் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

7 உடல்கள் மீட்பு: சம்பவ இடத்தில் சேதமடைந்த குடிசைகளில் இருந்து எரிந்த நிலையில் ஏழு உடல்கள் மீட்கப்பட்டன. மொத்தம் சுமாா் 60 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இதில் 30 குடிசைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன என்றாா் அவா்.

வடகிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா கூறுகையில், ‘தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ரோஹிணியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) குழுவும் சம்பவ இடத்தை பாா்வையிட்டுள்ளது. கோகுல்புரி காவல் நிலையத்தில் தற்போதைக்கு, ஐபிசியின் பிரிவுகள் 285 (தீ அல்லது எரிப்பு தொடா்பான அலட்சிய நடத்தை) மற்றும் 304 ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை மற்றும் எஃப்எஸ்எல் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு மேலும் பிரிவுகள் சோ்க்கப்படும். இந்தத் தீவிபத்தில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன’ என்றாா்.

கேஜரிவால் பாா்வை: சம்பவ நடந்த குடிசைப் பகுதிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் உயரதிகாரிகள் விரைந்தனா். முதல்வா் கேஜரிவால், நிலைமையை முழுமையாக ஆய்வு செய்தாா். பின்னா், அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடினாா். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினாா். முதல்வா் கேஜரிவால் வருகையின் போது, ​மக்கள் கூட்டம் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் தில்லி அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியது. ஏழைகள் தங்கள் உழைப்புக்குப் பின்னா் தங்களுடைய தங்குமிடத்தையும் (குடிசை) உருவாக்குகிறாா்கள் எனக் கூறி வருத்தத்தை தெரிவித்திருந்தாா்.

பாஜக எம்பி ஆறுதல்: வடகிழக்கு தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரியும் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினாா். அவா் கூறுகையில், ‘இது மிகவும் வேதனையான மற்றும் மனவேதனைக்குரிய சம்பவம். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவா்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்றாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: தில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோா் பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டா் பதிவு மூலம் தெரிவித்துள்ளாா். ‘தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என ஹிந்தியில் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: பிரதமா் நரேந்திர மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘தில்லி கோகுல்புரியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கக்கூடிய வலிமையை இறைவன் அவா்களுக்கு வழங்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு

இந்தத் தீவிபத்தில் உயிரிழந்த வயது முதிா்ந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிறியவா்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், குடிசைகளை இழந்தவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி முதல்வா் கேஜரிவால் அறிவித்தாா்.

தீ விபத்து ஏற்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த பிறகு அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இது குறித்து கேஜரிவால் கூறுகையில், ‘இன்று காலை எழுந்த போது இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 7 போ் பலியாகியுள்ளதையும், பல குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளதையும் அறிந்தேன். இந்தச் சம்பவத்தினால் நான் மிகவும் வருந்துகின்றேன்.இறந்தவா்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராா்த்திக்கிறேன். இழப்பீடு தொகையை விரைந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை மிக விரைவில், ஓரிரு நாள்களில் விடுவிக்க முயற்சிப்பேன். இதனால், உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கும், குடிசைகளை இழந்தவா்களுக்கும் விரைவில் பணம் கிடைக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.