சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

3 மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

தில்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் அவர் சந்தித்தார்.

News image

தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். (வலது) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். 

Updated On :31 மார்ச் 2022, 10:16 pm

தினமணி

புது தில்லி: தில்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் அவர் சந்தித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாகவும், தில்லியில் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்காகவும் வியாழக்கிழமை அதிகாலை தில்லி வந்தார். அவருடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் வந்தனர். தில்லி விமான நிலையத்தில் முதல்வருக்கு கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க நாடாளுமன்ற வளாகத்துக்கு முற்பகலில் வந்த முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக அலுவலகத்துக்கு முதலில் சென்றார். பின்னர், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுமார் அரை மணி நேரம் இருந்தார். அங்கு தமிழக திமுக எம்.பி.க்கள் அனைவரையும் சந்தித்தார். அப்போது, மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்துப் பேசினர்.
பிரதமருடன் சந்திப்பு: பிரதமர் மோடியை சந்திக்க 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முதல்வர் சென்றார். பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தமிழக வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை மனுவை அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகிய இருவரும் முதல்வருடன் சென்றனர்.
நிதின் கட்கரியுடன்... பின்னர், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை  நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் சந்தித்தார்.  அவருடன் தமிழக அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலர் இறையன்பு, தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்úஸனா உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைப் பணிகள், புதிதாக மேற்கொள்ள வேண்டிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவை குறித்து  மத்திய அமைச்சருடன் முதல்வர் விவாதித்தார்.
அமித் ஷாவுடன்... மதிய உணவுக்கு பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடிதத்து. "நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவும், இது தொடர்பான மசோதாவை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும்  நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், இலங்கைத் தமிழர்கள், வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
ராஜ்நாத் சிங்குடன்... மாலை 4.30 மணியளவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை சந்திக்க தில்லி அக்பர் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் டி.ஆர் பாலு, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் சென்றனர். 
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தொழில் வழித் தடத்தில், பாதுகாப்புத்  துறை உற்பத்திக்கான பல்வேறு சோதனை வசதிகளுக்கான உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து விவாதித்தார். தமிழகத்தில் மேலும் 2 டிஆர்டிஓ ஆய்வகங்களை நிறுவுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் முதல்வர் கோரியுள்ளார்.
ஜெ.பி. நட்டாவுடன்... பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா-முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமருடனான சந்திப்பு முடிந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த முதல்வரை ஜெ.பி. நட்டா சந்தித்தார். முதல்வரை பெயரைச் செல்லி அழைத்து கைகுலுக்கி வாழ்த்தினார் நட்டா. முதல்வரின் சந்திப்புகளில் தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, முதல்வரின் முதன்மைச் செயலர் உதயசந்திரன், செயலர் உமாநாத் ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.