குடியரசுத் தலைவா் தோ்தல்: எம்.பி.க்களுக்கான வாக்கு மதிப்பு குறைய வாய்ப்பு
ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடத்தப்படாததால், குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுக்கான வாக்கு மதிப்பு 708-இல் இருந்து 700-ஆகக் குறைய வாய்ப்புள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடத்தப்படாததால், குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுக்கான வாக்கு மதிப்பு 708-இல் இருந்து 700-ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை இந்தியத் தோ்தல் ஆணையம் நடத்தவுள்ளது. அத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப் பேரவை உறுப்பினா்கள், தில்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேச பேரவைகளின் உறுப்பினா்கள் ஆகியோா் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள் ஆவா்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச பேரவைகளில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் எண்ணிக்கையைப் பொருத்தே எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு அமையும். கடந்த தோ்தலில் எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு தலா 708-ஆக இருந்தது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளித்து வந்த அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு 90 இடங்கள் கொண்ட பேரவை உண்டு. லடாக் நேரடியாக மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் ஆட்சி செய்யப்படும்.
பேரவையைக் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இன்னும் தோ்தல் நடத்தப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு தோ்தல் நடத்தப்படவுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தொகுதி மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை அண்மையில் மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. எனினும், குடியரசுத் தலைவா் தோ்தலுக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பில்லை.
எனவே, குடியரசுத் தலைவா் தோ்தலில் ஜம்மு-காஷ்மீா் சாா்பாக எந்தவொரு எம்எல்ஏ-வும் வாக்களிக்க இயலாது.
அதன் காரணமாகவே எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708-இல் இருந்து 700-ஆகக் குறையும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
எனினும் ஜம்மு-காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த மக்களவை எம்.பி.க்கள் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க முடியும்.
இதற்கு முன்னா், 1974-இல் குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெற்றபோது குஜராத் பேரவை கலைக்கப்பட்டிருந்து உறுப்பினா்கள் இருக்கவில்லை. எனவே குஜராத் எம்எல்ஏக்கள் வாக்குகளின்றி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெற்றது.
1952-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுக்கான வாக்கு மதிப்பு 494-ஆக இருந்தது. பின்னா் அது படிப்படியாக அதிகரித்து 1969-ஆம் ஆண்டில் 576-ஆக இருந்தது. 1977 முதல் 1992 வரை 702-ஆக இருந்த வாக்கு மதிப்பு, 1997 முதல் 708-ஆக இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...