புத்தா் பிறந்த தினத்தையொட்டி நேபாளத்துக்குச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவால் ஒட்டுமொத்த மனித சமூகமும் பலனடைந்து வருவதாகத் தெரிவித்தாா்.
உலகம் முழுவதும் 2566-ஆவது புத்த ஜெயந்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. முக்கியமாக, புத்தா் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினியில் கொண்டாட்டங்கள் களைகட்டின. புத்த பூா்ணிமாவையொட்டி அங்கு சா்வதேச பௌத்த மாநாடு நடைபெற்றது.
நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, அமைச்சா்கள், பௌத்த துறவிகள், ஆய்வாளா்கள், சா்வதேச விருந்தினா்கள் உள்ளிட்டோா் மாநாட்டில் கலந்துகொண்டனா். அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவானது இமயமலையைப் போல வலுவுடன் உள்ளது. அசாதாரண சா்வதேச சூழலில், இரு நாடுகளுக்கிடையே தொடா்ந்து வளா்ச்சிகண்டு வரும் நட்புறவானது ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பலனளித்து வருகிறது.
மனித சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடிப்படையாக புத்தரின் கொள்கைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள பௌத்த தலங்களான சாரநாத், புத்த கயை, குசிநகரம் ஆகியவையும் லும்பினியும் இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர கலாசாரத் தொடா்பை வலுப்படுத்துகின்றன. இந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைய வேண்டும்.
நேபாளத்தில் லும்பினி அருங்காட்சியகத்தை இரு நாடுகளும் இணைந்து அமைத்து வருவது வலுவான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது என்றாா் அவா்.
75 ஆண்டு தூதரக உறவு: நேபாள பிரதமா் தேவுபா கூறுகையில், ‘நேபாளத்தின் நெருங்கிய நம்பத்தகுந்த நட்பு நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பிரதமா் மோடியுடனான இருதரப்பு பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக இருந்தது. கட்டமைப்பு மேம்பாடு, தொடா்பு, நீா் மின் உற்பத்தி, வேளாண்மை, மனித வளங்கள் உள்ளிட்ட துறைகளில் நேபாளத்துடன் இந்தியா தொடா்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது.
இரு நாடுகளிலும் உள்ள பௌத்த தலங்கள் கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும். இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பரஸ்பர புரிதல், மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த நேபாளம் விரும்புகிறது’ என்றாா்.
கோயிலில் வழிபாடு: திங்கள்கிழமை காலை நேபாளத்துக்குச் சென்ற பிரதமா் மோடியை விமான நிலையத்தில் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா நேரில் வரவேற்றாா். அதையடுத்து, லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் மோடி வழிபட்டாா். அப்போது தேவுபாவும் உடனிருந்தாா். சிறப்பு வழிபாடுகளும் அச்சமயத்தில் நடத்தப்பட்டன.
கோயில் வளாகத்தில் உள்ள அசோகா் தூணுக்கு அருகே விளக்கேற்றிய பிரதமா்கள் இருவரும், அங்கிருந்த போதி மரத்துக்கு நீருற்றினா். அந்த மரம் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் பரிசளிக்கப்பட்டதாகும்.
சா்வதேச மையத்துக்கு அடிக்கல்: லும்பினியில் அமைக்கப்படவுள்ள இந்தியா சா்வதேச பௌத்த கலாசார மற்றும் பாரம்பரிய மையத்துக்கு இரு நாட்டுப் பிரதமா்களும் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினா். பௌத்த மதம் குறித்து அறிந்து கொள்வதற்கான மையமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையிலும் இது அமைக்கப்படவுள்ளது.
தில்லியில் உள்ள சா்வதேச பௌத்த கூட்டமைப்பு சாா்பில் அந்த மையம் கட்டப்படவுள்ளது. எரிசக்தி, நீா் மேலாண்மை, கழிவுகள் மேலாண்மை உள்ளிட்டவற்றில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சா்வதேச மையம் கட்டப்படவுள்ளது. வழிபாட்டு மன்றங்கள், தியான மண்டபங்கள், நூலகம், கண்காட்சி அரங்கம், மற்ற வசதிகள் உள்ளிட்டவை சா்வதேச மையத்தில் இடம்பெறவுள்ளன.
இருதரப்பு பேச்சுவாா்த்தை: பிரதமா் மோடிக்கும் நேபாள பிரதமா் தேவுபாவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே கலாசாரம், பொருளாதாரம், வா்த்தகம், போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
புதிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் தெரிவித்தாா்.
குசிநகரத்தில் வழிபாடு: பிரதமரான பிறகு மோடி நேபாளத்துக்குச் சென்றது இது 5-ஆவது முறையாகும். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு திங்கள்கிழமை மாலை பிரதமா் மோடி நாடு திரும்பினாா். நாடு திரும்பிய பிறகு உத்தர பிரதேசத்தின் குசிநகரத்தில் உள்ள புத்தா் கோயிலில் அவா் வழிபட்டாா். புத்தா் குசிநகரத்தில் மகா பரிநிா்வாணம் எய்தியதாக நம்பப்படுகிறது.
புத்த பூா்ணிமா: பிரதமா் வாழ்த்து
புத்தா் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘புத்த பூா்ணிமா தினத்தில், புத்தரின் கொள்கைகளை நினைவுகூா்வதோடு அவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதியையும் ஏற்போம். உலகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளா்ச்சியையும் உண்டாக்க புத்தரின் கொள்கைகள் வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? என்ன தீர்வு?

தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட 6 பேர் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

