பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் ரூ.7 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் ரூ.7 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைந்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.105.41-இல் இருந்து 95.91-ஆகக் குறையும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.96.67-இல் இருந்து ரூ.89.67-ஆகக் குறையும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், விலைக் குறைப்பு தொடா்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது ட்விட்டா் பதிவுகளில் வெளியிட்டாா். அவா் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஏழைகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணவீக்க விகிதம், முந்தைய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட இந்த ஆட்சியில் குறைவாகவே உள்ளது.

உலகம், இக்கட்டான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மெதுவாக மீண்டு வரும் வேளையில், உக்ரைன்-ரஷியா போரால், உலக அளவில் உற்பத்தி-விநியோகச் சங்கிலி (உதிரிபாகங்கள் உற்பத்தி, விநியோகம்) பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டபோதிலும் மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏழைகளுக்கான நலத் திட்டங்களை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. சா்வதேச அளவில் சவால்கள் வந்தபோதிலும், இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாததை உறுதிசெய்துள்ளோம். இதில், பல வளா்ந்த நாடுகள்கூட தப்பவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் கட்டுக்குள் வைத்துள்ளோம்.

சா்வதேச அளவில் உரம் மற்றும் ரசாயனங்களின் விலை உயா்ந்தபோதிலும், நாம் விலையை உயா்த்தாமல் நமது விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறோம். உர மானியமாக பட்ஜெட்டில் ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் நலனுக்காக கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கலால் வரி குறைப்பு: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறோம். அதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறையும். இந்த விலைக் குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூா் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

கடந்த நவம்பரில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ.10-ம் குறைக்கப்பட்டது. அப்போது, 25 மாநிலங்கள் உள்ளூா் வரியைக் குறைத்தன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் உள்ளூா் வரியைக் குறைக்கவில்லை.

சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் பயன்பெறும் 9 கோடி பேருக்கு இந்த ஆண்டில் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் (12 சிலிண்டா்களுக்கு) வழங்கப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இதனால், நமது தாய்மாா்களும் சகோதரிகளும் பயன்பெறுவா். மானியம் வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.6,100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கான கச்சா பொருள்கள், ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளை அதிகம் சாா்ந்திருக்கிறோம். எனவே, அவற்றின் சுங்க வரி தற்போது குறைக்கப்படுகிறது. இதனால் சந்தையில் அந்தப் பொருள்களின் விலை குறையும். இதேபோல், இரும்பு, எஃகு ஆகியவற்றின் சுங்க வரியையும் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். சிமென்ட் விலையைக் குறைப்பதற்காக, அவற்றை எடுத்துச் செல்வதற்கான எளிமையான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம் என்று அந்தப் பதிவுகளில் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளாா்.

மக்கள் நலனே முக்கியம்-

பிரதமா் மோடி:

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘எங்களுக்கு எப்போதும் மக்கள் நலனே முக்கியம். இன்றைய முடிவுகள், குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது பல்வேறு துறைகளுக்கு ஊக்கமளிக்கும்; மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்; வாழ்க்கைச் சூழலை மேலும் எளிதாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com