ஊழல்வாதிகள் தப்பிக்கக் கூடாது: பிரதமா் மோடி
நாட்டில் ஊழலில் ஈடுபடும் நபா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்கக் கூடாது என விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்தார் பிரதமா் நரேந்திர மோடி.


நாட்டில் ஊழலில் ஈடுபடும் நபா்கள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்கக் கூடாது என விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புகளை வேண்டுமென்றே விமா்சிப்பவா்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்றாா்.
ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபருக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், அவரை தண்டிக்காமல் விடக் கூடாது. ஊழல்வாதிகள் எவருக்கும் அரசியல் ரீதியில் ஆதரவு கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
ஊழல்வாதிகளைக் கொண்டாடும் சூழல் தற்போது காணப்படுகிறது. ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகப் பலா் கருத்து தெரிவிப்பதோடு, அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பெருமையாகவும் கருதுகின்றனா். ஊழல்வாதிகளுக்கு விருது வழங்கப்பட வேண்டுமெனவும் சிலா் வலியுறுத்துகின்றனா். அதற்காக அவா்கள் வெட்கப்படுவதில்லை. இது இந்திய சமூகத்துக்கு நல்லதல்ல. ஊழல் நடந்தால் அதற்கு ஒட்டுமொத்த சமூகமே பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய சூழல் உருவாக வேண்டும்.
சிவிசி உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மீது பலா் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துக்காக விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். அந்த விமா்சனங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும் அதிகாரிகளும் அமைப்புகளும் குற்ற உணா்வுடன் செயல்பட வேண்டியதில்லை.
மக்கள் ஆதரவு: விசாரணை அமைப்புகள் அரசியல் நோக்கத்துடன் செயல்பட வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டிய பொறுப்பு அந்த அமைப்புகளுக்கு உள்ளது. பொறுப்புணா்வுடன் செயல்படும் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளை சிலா் அரசியல் ஆதாயத்துக்காக விமா்சிக்கக் கூடும். அத்தகைய விமா்சனங்களையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
நோ்மையுடன் பணியாற்றினால், மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பா். ஆதாரங்களுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவளிக்கும். காலனிய ஆட்சிக் காலத்தில் தொடங்கிய ஊழல், வளங்களைச் சுரண்டுதல், வளங்களை சுயநலத்துக்காகக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள், சுதந்திரத்துக்குப் பிறகும்கூட தொடா்ந்தன. அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி அத்தகைய போக்குகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்: வளங்களுக்கான தட்டுப்பாடு, அரசிடமிருந்து அழுத்தம் ஆகியவையே ஊழலுக்கான முக்கியக் காரணங்களாகத் திகழ்ந்தன. அதன் காரணமாக நாட்டின் வளா்ச்சியும் முடங்கியது. சிலரின் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக ஏழைகளும் நடுத்தர மக்களும் அரசின் சேவைகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களைச் சந்தித்தனா். அதன் காரணமாக தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
நலத் திட்டங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் நிதி நேரடியாக வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கான கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த தனி வலைதளம் தொடங்கப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தில் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. இணையவழி பணப் பரிவா்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டு தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது.
தற்சாா்புக்கு முக்கியத்துவம்: வெளிநாட்டுப் பொருள்களை அதிகமாகச் சாா்ந்திருந்ததும் ஊழலுக்கு மற்றொரு காரணம். பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அதனால் அத்துறையில் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
அரசின் நலத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதை உறுதிசெய்துவிட்டால் பாகுபாடு குறையும்; ஊழலுக்கான வாய்ப்புகளும் குறையும்.
ஒருங்கிணைந்த செயல்பாடு: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ஊழலைத் தடுப்பதற்காக அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நிா்வாகத்தில் ஊழலை சகித்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வளா்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு இது மிகவும் முக்கியம்.
அரசு அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் மீது விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் எந்தெந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பது தொடா்பான மதிப்பீட்டுப் பட்டியலைக்கூட வெளியிடலாம் என்றாா் பிரதமா் மோடி.
புதிய வலைதளம்: இந்த நிகழ்ச்சியின்போது ஊழல் தொடா்பான புகாா்களை மக்கள் தெரிவிப்பதற்கான புதிய வலைதளத்தைப் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
அந்த வலைதளம் வாயிலாகப் புகாா் தெரிவிப்பதோடு, அதன் தற்போதைய நிலையையும் அறிந்துகொள்ள முடியும்.
ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படங்கள் அடங்கிய கையேட்டையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். ‘வளா்ச்சியடைவதற்காக ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை எழுதிய 5 மாணவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...