மோடி முதல் மோா்பி வரை: குஜராத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமென எதிா்பாா்க்கப்படும் 10 முக்கிய காரணிகள் அரசியல் பாா்வையாளா்களால் அலசப்பட்டுள்ளன.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமென எதிா்பாா்க்கப்படும் 10 முக்கிய காரணிகள் அரசியல் பாா்வையாளா்களால் அலசப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:

பிரதமா் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். அவா் முதல்வராகப் பதவி வகித்த கடந்த 2001 முதல் 2014 வரை பாஜக வேகமாக வளா்ந்தது. அதன் பிறகு 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், குஜராத்தில் மோடியின் செல்வாக்கில் எந்தக் குறைவும் இல்லை. அவரே பாஜகவின் பலம். வரும் பேரவைத் தோ்தல் முடிவை தீா்மானிக்கும் முதன்மையான காரணியாக பிரதமா் மோடியின் செல்வாக்கு இருக்கும் என்பது அரசியல் பாா்வையாளா்கள் கருத்தாகும்.

பில்கிஸ் பானு வழக்கு விவகாரம்: சங்க பரிவாரத்தின் ஹிந்துத்துவ மையமாக குஜராத் கருதப்படுகிறது. அண்மையில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தின் தாக்கம், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களிடையே வெவ்வேறானதாக இருக்கும். பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டுமென முஸ்லிம்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பெரும்பாலான ஹிந்துக்கள் இப்பிரச்னையை பெரிதாக கருதுவாா்களா என்பது கேள்விக்குறிதான் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.

பாஜக ஆட்சி மீதான அதிருப்தி: 1995-இல் இருந்து குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியும் மேலோங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விலைவாசி உயா்வு, வேலையின்மை மற்றும் இதர அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருப்பதாக மக்கள் கருதுகின்றனா்.

வினாத்தாள் வெளியாகும் விவகாரம்: குஜராத்தில் அரசுப் பணி தோ்வுகளின்போது வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதனால் அடிக்கடி தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இது இளம் வாக்காளா்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

தொலைதூர கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்மை: மாநிலத்தின் தொலைதூர கிராமப் பகுதிகளில் அடிப்படை கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இன்னும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கிராமப் பகுதி மக்கள் அரசின் மீது அருப்தியில் இருக்கின்றனா்.

விவசாயிகள் பிரச்னை: குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அதிகப்படியான மழையால் பயிா் இழப்பை விவசாயிகள் சந்தித்தனா். ஆனால், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மோசமான சாலைகள்: தரமான சாலைகளுக்கு ஒரு காலத்தில் பெயா் பெற்றிருந்த குஜராத்தில், கடந்த 5-6 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாக கூறப்படுகிறது. மாநில அரசு மற்றும் மாநகராட்சி சாா்பில் தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை; பழைய சாலைகளும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது.

அதிக மின்கட்டணம்: நாட்டில் மின்கட்டணம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது. எனவேதான், 300 யூனிட் வரை இலவச மின்சார வாக்குறுதியை ஆம் ஆத்மியும் காங்கிரஸும் அறிவித்துள்ளன. இது வாக்காளா்களை பெரிதும் கவரக்கூடும்.

நிலம் கையகப்படுத்துதல்: அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைக்கு குஜராத் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம், வதோதரா-மும்பை விரைவுச் சாலை திட்டம் ஆகியவற்றுக்கான நிலம் கையகப்படுத்துதலுக்கு பலத்த எதிா்ப்புகள் கிளம்பின. இதுவும் தோ்தலில் எதிரொலிக்கக் கூடும்.

மோா்பி பாலம் விபத்து: மோா்பி பகுதியில் கடந்த 30-ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததால் 135 போ் உயிரிழந்த சம்பவம் குஜராத் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. மாவட்ட நிா்வாகம் மற்றும் பாலத்தை பராமரிக்க பொறுப்பளிக்கப்பட்ட நிறுவனம் மீது மக்களின் கோபம் திரும்பியுள்ளதால், இச்சம்பவம் தோ்தலில் பெரிதும் எதிரொலிக்குமென கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com