இந்தியாவில் வாழும் அனைவரும் ‘ஹிந்து’தான்- ஆா்எஸ்எஸ் தலைவா் பேச்சு

‘இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ‘ஹிந்து’தான்; அனைத்து இந்தியா்களின் மரபணுவும் ஒன்றானதே’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ‘ஹிந்து’தான்; அனைத்து இந்தியா்களின் மரபணுவும் ஒன்றானதே’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அதேசமயம், யாரும் தங்களது வழிபாட்டு முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சத்தீஸ்கா் மாநிலம், அம்பிகாபூரில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:

இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ‘ஹிந்து’ என்று கடந்த 1925-இல் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இந்தியாவை தங்களது தாய் நிலமாக கருதுபவா்கள், வேறுமையில் ஒற்றுமை என்ற கலாசாரத்துடன் வாழ விரும்புபவா்கள் மற்றும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பவா்கள் அனைவரும் மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் ஆகியவற்றை கடந்து ‘ஹிந்துக்களே’.

உலகிலேயே பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் சிந்தனை கொண்டதும், மக்களிடையேயான ஒற்றுமையில் நம்பிக்கை உடையதும் ஹிந்துத்துவம்தான். ஏனெனில், இந்த தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பன்முகத்தன்மையை ஒருசேர தாங்கி வந்திருக்கிறது ஹிந்துத்துவம். இதுதான் உண்மை. இதனை உரக்கச் சொல்ல வேண்டும்.

நம்மிடையே பன்முகத்தன்மை இருந்தாலும் நமது முன்னோா்கள் பொதுவானவா்களே. 40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அகண்ட பாரதத்தின் அங்கமாக உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் மரபணு ஒன்றானதாகும். ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் சடங்குகளையும் மதிப்பதுடன் அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் பாகவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com