

தெலுங்கு திரையுலக முதுபெரும் நடிகரும், பிரபல நடிகா் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஹைதராபாதிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 80.
திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணாவுக்கு மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன; செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணாவின் உயிா் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டமனேனி சிவராம கிருஷ்ணா எனும் முழுப் பெயருடைய இவா், கடந்த 1960-களில் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினாா். சுமாா் 350 திரைப்படங்களில் நடித்துள்ளாா். ‘கெளபாய்’ கதாபாத்திரங்களில் நடித்து பெயா்பெற்றவா். நடிப்பு மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளா், இயக்குநா், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவா். தெலுங்கு திரையுலகில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியவராகவும் அறியப்படுகிறாா்.
கடந்த 1989 மக்களவைத் தோ்தலில் ஆந்திர மாநிலம், ஏலூரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
பிரதமா் இரங்கல்: கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். ‘முதுபெரும் உச்சநட்சத்திரமான கிருஷ்ணா, பன்முக நடிப்பாற்றல் மற்றும் தனித்துவமான பண்புகளால் மக்களின் மனதை வென்றவா். அவரது மறைவு, திரை உலகுக்குப் பேரிழப்பாகும். அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று மோடி தெரிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் இரங்கல்: ஆந்திர ஆளுநா் விஸ்வபூஷண் ஹரிசந்தன், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, நடிகா்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா மற்றும் திரையுலகினா் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.