செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு, எஞ்சிய பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகம் மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி

News image

கோப்புப்படம்

Updated On :16 நவம்பர் 2022, 9:38 pm

 நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு, எஞ்சிய பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகம் மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிதாக இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
 முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 இந்த விவகாரத்தை கையாளும் வகையில், மேற்பார்வைக் குழுவுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவில், அணைப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கமான தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) செயல்பட்டு வரும் வரை, அதன் அனைத்து அதிகாரங்கள் மற்றும் பணிகளை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 மேலும், தற்போதுள்ள மேற்பார்வைக் குழுவை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக, இக்குழுவில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களை இரு மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு வல்லுநர் என்ற அடிப்படையில் சேர்க்கும் பரிந்துரையையும் ஏற்கிறோம். சில நிலுவைப் பணிகள் இருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றியமைக்கப்பட்ட குழுவின் கவனத்திற்கு கொண்டு வரலாம். இது குறித்த கோரிக்கையை மேற்பார்வைக் குழு உரிய முறையில் ஆராய்ந்து முடிவு எடுக்கும்.
 வழக்கமான என்டிஎஸ்ஏ செயல்பாட்டுக்கு வரும் வரை இந்த உத்தரவின்படி மறுசீரமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு, 2021 சட்டத்தின்படி அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளியாக இருக்கும். என்டிஎஸ்ஏ செயல்பாடுகளை நிறைவேற்றும் என்றும் தெரிவித்திருந்தது.
 இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஓர் இடையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் வகையில், தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க மாற்றியமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பேபி அணை மற்றும் எர்த் அணைப் பகுதியில் எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், நீர்க் கசிவுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்ப்புப் பணிகள், புவியதிர்வுகளைக் கண்டறியும் கருவிகளை நிறுவ நடைமேடை அமைப்பது, வழக்கமான பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு அணையின் காட் சாலைப் பகுதி வழியாக அணைப் பகுதிக்கு சாமான்களையும், இயந்திரங்களையும் கொண்டு செல்வதற்கு தமிழகத்திற்கு தேவையான அனுமதியை அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
 பேபி அணையை பலப்படுத்த 15 மரங்களை வெட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மீட்டெடுக்க கேரளத்துக்கு உத்தரவிட வேண்டும். மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி காட் சாலையைப் பழுதுபார்க்கவும் அந்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதே போன்று பெரியாறு ஏரியில் பழைய படகுகளுக்குப் பதிலாக புதிய படகுகளை இயக்க தமிழகத்திற்கு அனுமதி அளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.