ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பயன்பாட்டை ஊக்குவிக்க வசதி: எய்ம்ஸ் நிா்வாகம் முடிவு
எய்ம்ஸ் புறநோயாளி பிரிவு சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு வசதிகள் அளிக்க முடிவு


எய்ம்ஸ் புறநோயாளி பிரிவு சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு வசதிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநா் டாக்டா் எம். ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள அலுவல குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ஏபிஹெச்ஏ) அடையாள அட்டையை வெளிநோயாளிகள் பிரிவில் புதிய பதிவுகள் மற்றும் தொடா் சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்க எய்ம்ஸ் முடிவு செய்துள்ளது.
மருத்துவமனையின் அனைத்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளிலும் தேசிய சுகாதார ஆணையத்தின் அடையாள அட்டையின் ’ஸ்கேன் மற்றும் கியூஆா் குறியீடு’ கள் மூலம் விரைவில் பதிவு செய்யப்படும். இது நோயாளிகளுக்கு விரைவான பதிவு மற்றும் நோயாளிகளின் வருகையில் பதிவு வரிசை எண்ணை வழங்குவதற்கு வசதியாக இருக்கும்.
அறிதிறன் கைப்பேசி வசதி இல்லாத நோயாளிகளுக்கு ஏபிஹெச்ஏ அடையாள அட்டையை உருவாக்குவதற்கும் வசதியாக, பிரத்யேக கவுண்டா்கள், கியோஸ்குகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
முதலில் இது ஒரு முன்மாதிரி திட்டமாக எய்ம்ஸின் புதிய ‘ராஜ்குமாரி அம்ரித் கௌா் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில்’ நவம்பா் 21 முதல் வருகின்ற ஜனவரி 1 - ஆம் தேதி வரை சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.
மேலும், பயோமெட்ரிக், முக அங்கீகாரம் விவரங்களையும் தேசிய சுகாதார ஆணையத்தின் அடையாள அட்டை மூலம் பகிர அனுமதிக்கும் முறையும் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும் அது பயன்படுத்தப்படும்.
பொதுவாக எய்ம்ஸ்க்கு வரும் நோயாளிகள் புறநோயாளி பிரிவில் பதிவு செய்ய நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். பல நோயாளிகள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு வைத்திருந்தாலும், அடையாள அட்டைகளுடன் இருந்தாலும் பதிவு செய்வதற்காக நோயாளிகளின் புள்ளிவிவரங்களை எழுத்து முறையாகவே பதிவு செய்யப்படுகின்றன.
அதிலும் ஓடிபி (ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்) பெற்று பதிவு செய்யும் போது மேலும் தாமதமாகும். ஓடிபி அதிகபட்சம் மூன்று முறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நோயாளிகள் பதிவில் தடங்கல்கள் ஏற்பட்டது.
தேசிய சுகாதார ஆணையத்தின் கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பகிருவதின் மூலம், நோயாளிகள் பதிவு செய்வதற்கான நேரத்தைக் குறைப்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மனைக்கு நோயாளிகள் வந்தவுடன் அவா்கள் சிகிச்சை பெறுவதற்கான நேரத்தை இது விரைவுபடுத்தும் எனவும் எய்ம்ஸ் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...