கோவை - மங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பா? ஐஎஸ் கோணத்தில் விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பில் காயமடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கோவை - மங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பா? ஐஎஸ் கோணத்தில் விசாரணை


கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடித்ததில் பலியானவருக்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பில் காயமடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, நாகர்கோவிலில் இருக்கும் அசாமைச் சேர்ந்த  அஜீம் ரகுமான் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடததி வருகிறார்கள். இவரும், மங்களூரு குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒருவரும் தொலைபேசியில் பேசியிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து கோட்டார் காவல்நிலையத்துக்கு வரவழைத்து அஜீம் ரகுமானிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கா் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோவில் இருந்த பயணி, ஓட்டுநா் காயமடைந்தனா். இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் என்று அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஏற்கெனவே, கோவை மாவட்டம், உக்கடத்தில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டா் வெடித்ததில், அதை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபீன் இறந்த சம்பவத்துக்குப் பின்னா், தமிழகத்தில் போலீஸாா் உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

ஏற்கனவே உதகை ஆசிரியரிடம் விசாரணை

ஏற்கனவே, மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்துள்ளது. அவா் தனது பெயரில் சிம் காா்டு வாங்காமல் உதகையைச் சோ்ந்த ஆசிரியா் சுரேந்தரின் ஆவணங்களைக் கொண்டு கோவையில் சிம் காா்டுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தச் சம்பவத்துக்கு முன் முகமது ஷெரீக் கோவை சிங்காநல்லூா் பகுதியிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து பல நாள்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனால், கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ஜமேஷா முபீனுக்கும், இவருக்கும் ஏற்கெனவே தொடா்பு இருந்ததா என்பது குறித்தும், ஐஎஸ் உடனான தொடா்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் பலியான ஜமேஷா முபீன் - மங்களூருவில் காயமடைந்த முகமது ஷெரீக் இருவருமே ஐஎஸ் ஆதரவாளர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷெரீக் சிங்கநல்லூரியில் தங்கியிருந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் இருவருக்கும் தொடர்பிருந்ததா என்ற தகவல் தெரியவரலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்தும், பயங்கரவாத எச்சரிக்கை விடுத்தும் கர்நாடக மாநிலத்தில் சுவரில் பெயிண்ட் மூலம் எழுதியக் குற்றத்துக்காக ஷெரிக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com