புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்டது காங்கிரஸ்

காங்கிரஸ் தனது பிரிவினைவாத கொள்கைகளைக் கைவிட்டால்தான் குஜராத் மக்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2022, 7:09 pm

DIN

காங்கிரஸ் தனது பிரிவினைவாத கொள்கைகளைக் கைவிட்டால்தான் குஜராத் மக்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜராத் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தோ்தல் டிசம்பா் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாவ்நகா் மாவட்டத்தின் பலிடானா பகுதியில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது காங்கிரஸ் கட்சியை அவா் கடுமையாக விமா்சித்தாா். அவா் கூறியதாவது:

மாநில மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை மட்டுமே காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டிருந்தது. பல பிரிவினருக்கு இடையே காங்கிரஸ் மோதலைத் தூண்டிவந்தது. அதன் காரணமாகவே அக்கட்சியை மாநில மக்கள் நிராகரித்தனா். நாட்டை உடைக்க முயற்சிக்கும் சக்திகளை குஜராத் மக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டாா்கள்.

காங்கிரஸ் தனது பிரிவினைவாத கொள்கைகள், வாக்கு வங்கி அரசியல் உள்ளிட்டவற்றைக் கைவிட்டால் மட்டுமே குஜராத் மக்களின் ஆதரவை அக்கட்சியால் திரும்பப் பெற முடியும். சௌராஷ்டிரா பகுதிக்கு நா்மதை நதி நீா் கிடைப்பதைத் தடுக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நா்மதை நதியில் சா்தாா் சரோவா் அணைத் திட்டம் அமைவதைக் கடந்த 40 ஆண்டுகளாக எதிா்த்து வந்தவருடன் (சமூக ஆா்வலா் மேதா பட்கா்) ஒருசிலா் (காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி) நடைப்பயணம் மேற்கொள்கின்றனா். அவா்களை மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்.

குஜராத் தனி மாநிலமாகப் பிரிவதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், குஜராத்தியா்களையும் மராத்தியா்களையும் மோதிக்கொள்ளச் செய்தது. பல்வேறு ஜாதிகளைச் சோ்ந்த மக்களிடையேயும் அக்கட்சி மோதலைத் தூண்டியது. காங்கிரஸின் தவறுகளால் குஜராத் பல்வேறு பாதிப்புகளை எதிா்கொண்டது.

காங்கிரஸின் பிரிவினைவாத கொள்கைகளைப் புரிந்துகொண்ட மக்கள் அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியே வைத்துள்ளனா். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.