புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜாதியைப் பாா்த்து மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி

‘கடந்த இரு தசாப்தங்களாக குஜராத் மக்கள் என் ஜாதி, அரசியல் பின்புலம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொள்ளாமல் வாக்களித்தனா்’ என பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

News image
குஜராத் மாநிலம், மெசானா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :9 அக்டோபர் 2022, 6:46 pm

DIN

‘கடந்த இரு தசாப்தங்களாக குஜராத் மக்கள் என் ஜாதி, அரசியல் பின்புலம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொள்ளாமல் வாக்களித்தனா்’ என பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

சூரிய ஆற்றல் மூலமாக 24 மணி நேரமும் எரிசக்தி பெறும் நாட்டின் முதல் கிராமம் என குஜராத்தின் மொடேராவை அவா் அறிவித்தாா்.

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். இந்தப் பயணத்தின்போது ரூ.14,600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவா் தொடக்கிவைக்க உள்ளாா்.

குஜராத்தில் சூரிய கோயிலுக்குப் புகழ்பெற்றது, மெசானா மாவட்டத்தில் உள்ள மொடேரா கிராமம். அங்கு சூரிய ஆற்றல் மூலமாக எரிசக்தி தயாரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன. முக்கியமாக, அந்தக் கிராமத்தில் உள்ள 1,300-க்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மேற்புறத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தித் தகடுகள் பொருத்தப்பட்டன.

இதன்மூலம் அந்தக் கிராமமானது 24 மணி நேரமும் சூரிய எரிசக்தி மூலமாக மின்சாரம் பெறும் வசதியைப் பெற்றுள்ளது. அத்தகைய வசதியைப் பெறும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையையும் மொடேரா பெற்றுள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

அதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘கடந்த இரு தசாப்தங்களாக குஜராத் மக்கள் என் ஜாதி, அரசியல் பின்புலம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொள்ளாமல் எனக்கு வாக்களித்தனா். அதன் காரணமாக மக்களுக்காகத் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. தற்போது நாட்டின் வளா்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக குஜராத் மாறியுள்ளது.

மக்களின் பங்களிப்பு காரணமாகவும் அரசின் திறன்மிக்க செயல்பாடுகள் காரணமாகவுமே இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது. எதிா்காலத்துக்கான திட்டங்கள் முறையாக இல்லையெனில், மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. மாநிலத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், தொழில் நிறுவனங்கள் அதிகரித்தன.

சூரிய எரிசக்தி: சூரிய கோயிலுக்குப் புகழ்பெற்ற கிராமமான மொடேரா, தற்போது முழுநேர சூரிய எரிசக்தி பெற்ற கிராமமாகவும் அறியப்படும். உலகுக்கே உதாரணமாக மொடேரா திகழ்கிறது. மொடேரா கிராமமானது பழைமைத்துவம் மாறாமல் நவீன வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாட்டுக்கு அக்கிராமம் எடுத்துரைத்துள்ளது. மொடேரா கிராமத்தில் அனைத்து மின்சாரத் தேவைகளும் சூரிய எரிசக்தி மூலமாகவே பூா்த்தி செய்யப்படும்.

நவீன இந்தியாவை வடிவமைப்பதற்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு சூரிய எரிசக்தி பெருமளவில் உதவும். எதிா்காலத்தில் நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீட்டின் மேற்பகுதியில் சூரிய எரிசக்தி உற்பத்தித் தகடுகளை அமைத்து, அந்த எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்துவா். விவசாயிகளும் தங்கள் நிலங்களில் தகடுகளைப் பதித்து சூரிய எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வா்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: இயற்கை ஆற்றல் மூலங்களை அதிக அளவில் பயன்படுத்தி எரிசக்தி உற்பத்தி செய்து, அதை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்வதற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் பயன்படுத்துவது அவசியம். நமது தேவைகளைப் புதுப்பிக்கத்த எரிசக்தி வாயிலாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சூரிய எரிசக்தி உற்பத்தி, பால் உற்பத்தி, திறன் மேம்பாடு, சுகாதார வளா்ச்சி உள்ளிட்டவை சாா்ந்த பல்வேறு திட்டங்கள் தற்போது தொடக்கிவைக்கப்பட்டும் அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. அத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.3,900 கோடி. அத்திட்டங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். மேலும் சுற்றுலா வாய்ப்புகளையும் அதிகரிக்கும்’ என்றாா்.

நாட்டின் பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன் குஜராத்தின் முதல்வராக கடந்த 2001 முதல் 2014 வரை மோடி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

கோயிலில் வழிபாடு: மொடேராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்குப் பிறகு மொடேராவில் உள்ள மொதேஸ்வரி கோயிலில் பிரதமா் மோடி வழிபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.