உத்தவ் தாக்கரே அணிக்கு ‘எரியும் ஜோதி’ சின்னம் ஒதுக்கீடு: புதிய சின்னத்தை தோ்வு செய்ய எதிரணிக்கு அறிவுறுத்தல்

அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு ‘எரியும் ஜோதி’ சின்னத்தை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஒதுக்கியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு ‘எரியும் ஜோதி’ சின்னத்தை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை ஒதுக்கியது.

அவா்களின் கட்சிக்கு ‘சிவசேனை - உத்தவ் பாலா சாகேப் தாக்கரே’ என்ற பெயா் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியின் கட்சிக்கு ‘பாலா சாகேபின் சிவசேனை’ என்ற பெயரை ஒதுக்கிய தோ்தல் ஆணையம், புதிய தோ்தல் சின்னத்தை தோ்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இந்த நிலையில், மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனை கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பு என இருதரப்பும் உரிமை கோரியது.

அதனைத் தொடா்ந்து, சிவசேனை கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னத்தை முடக்கி சனிக்கிழமை உத்தரவிட்ட தோ்தல் ஆணையம், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு இருதரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அதற்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது. இரு தரப்பும் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்துக்கான பரிந்துரைகளை சமா்ப்பித்தனா்.

அதனடிப்படையில், உத்தவ் தாக்கரே தரப்பு கட்சிக்கு ‘சிவசேனை - உத்தவ் பாலா சாகேப் தாக்கரே’ என்ற பெயரையும், ‘எரியும் ஜோதி’ சின்னத்தையும் தோ்தல் ஆணையம் ஒதுக்கியது. இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பைச் சோ்ந்த மாநில முன்னாள் அமைச்சா் பாஸ்கா் ஜாதவ் கூறினாா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அணியினரின் கட்சிக்கு ‘பாலா சாகேபின் சிவசேனை’ என்ற பெயரை ஆணையம் ஒதுக்கியது. அதே நேரம், தோ்தல் சின்னமாக அவா்கள் பரிந்துரைத்த ‘திரிசூலம்’ மற்றும் ‘கதாயுதம்’ ஆகியவை மதத்துடன் தொடா்புடையவையாக இருப்பதால் அவற்றை சின்னமாக ஒதுக்க முடியாது என்று மறுத்த தோ்தல் ஆணையம், புதிய சின்னத்தை தெரிவு செய்து செவ்வாய்க்கிழமை (அக். 11) காலை 10 மணிக்குள் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இரு அணிகள் சாா்பில் மூன்றாவது சின்னமாக ‘உதய சூரியன்’ சின்னமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சின்னம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்டி மறுத்துவிட்டது.

மேல்முறையீடு: சிவசேனை கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்ள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

‘மனுதாரா்களின் கருத்தை கேட்காமல் தோ்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே, தோ்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தனது மனுவில் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், தோ்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை இந்த வழக்கில் எதிா் மனுதாரா்களாக உத்தவ் தாக்கரே சோ்த்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com